திருவண்ணாமலை, ஏப். 12: படக்குழுவினரிடம் மட்டுமே இருந்த ஜனநாயகன் படம் இணையதளத்தில் எப்படி ரிலீசானது என, சிபிஐ விசாரித்தால் உண்மை வெளியாகும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். திருவண்ணாமலையில் நேற்று பாஜக வேட்பாளர் ஏழுமலையை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் செய்தார். அதைத் தொடர்ந்து, அவர் அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது: இந்த தேர்தலில் முதல்வர் ஸ்டாலினுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே தான் போட்டி. நாடாளுமன்றத் தேர்தலில்தான் முதல்வர் ஸ்டாலினுக்கும் பிரதமர் மோடிக்கும் போட்டி நடந்தது. இது சட்டமன்றத் தேர்தல். எனவே, இந்த தேர்தலுக்கும் பாஜகவுக்கும் சம்பந்தமில்லை.
ஜனநாயகன் திரைப்படத்தை தேர்தல் நோக்கத்திற்காகத்தான் எடுத்தார்கள். சட்ட சிக்கல், அரசியல் சிக்கல் காரணத்தால் அதனை வெளியிட முடியவில்லை. தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், 7 ஜிபி மற்றும் எச்டி தரத்தில் இணையதளத்தில் படத்தை வெளியிட்டுள்ளதால் யாருக்கு சாதகம் என்பதை புரிந்து கொள்ளலாம். தேர்தலுக்காக எடுத்திருக்கிறார்கள். ஆனால், யார் வெளியிட்டு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. கண்டுபிடிக்க வேண்டும். ஆளுங்கட்சிக்கு எதிராக, எங்கள் கூட்டணிக்கு எதிராக இந்த படம் இருக்கும் என்று நான்கு மாதத்திற்கு முன்பு சொன்னார்கள்.
இதுகுறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும். சிபிஐ விசாரித்தால் சுலபமாக தெரிந்து கொள்ளலாம். ஆனால், சிபிஐ விசாரணை எப்போது வரும்? எப்போது விசாரிப்பார்கள்? அதற்குள் தேர்தல் முடிந்து விடும். இந்த திரைப்படத்தின் பிரிண்ட்களில் வாட்டர் மார்க் இருக்கும். தயாரிப்பாளர், டைரக்டர், எடிட்டர் ஆகியோர்களிடம் ஒரு வாட்டர் மார்க் இருக்கும். அவர்கள்தான் வைத்திருக்க முடியும். எனவே, இதனை உங்களுடைய யூகத்திற்கே விட்டு விடுகிறேன். தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ளது. எனவே, யாருடைய பிரசாரமும் ரத்தாக கூடாது. தேர்தல் பிரசாரங்களுக்கு காவல்துறை அனுமதி கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, தருமபுரியில் டாக்டர் ராமதாஸ் அவரது மருமகளை எதிர்த்து பிரசாரம் செய்ய இருக்கிறாரே அதனால் பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்விக்கு, போகப் போகத்தான் தெரியும் என அன்புமணி ராமதாஸ் பதிலளித்தார்.
