திருவண்ணாமலை, ஏப்.10: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், சமையல் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடுக்கு மாற்று ஏற்பாடாக பிரசாதம் தயாரிக்க 4 மின அடுப்புகள் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்கா- ஈரான் போர் காரணமாக, சமையல் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் பதிவு செய்ய ஒரு மாதம் அவகாசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர் விநியோகத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எனவே, சமையல் காஸ் சிலிண்டரை மட்டுமே நம்பி செயல்படும் ஓட்டல்கள், விடுதிகள் பெரும் சிக்கலை சந்தித்து வருகின்றன.
இந்நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் ேகாயிலில், பக்தர்களுக்கு தினமும் கட்டணமின்றி வழங்கப்படும் லட்டு பிரசாதம் மற்றும் விற்பனைக்கு வழங்கப்படும் முறுக்கு, அதிரசம், மிளகுவடை போன்றவை காஸ் தட்டுப்பாட்டால் தயார் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே, முழுமையாக விநியோகிக்க முடியாமல், தினமும் குறைந்த அளவில் தயாரித்து வழங்கினர். மேலும், விறகு அடுப்பு பயன்படுத்தப்பட்டன. ஆனாலும், அவற்றால் புகை போன்ற பாதிப்புகள் ஏற்படுவதால், அந்த முயற்சியும் கைவிடப்பட்டது. இந்நிலையில், கோயில் பிரசாதம் தயாரித்தல் மற்றும் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் ஆகியவற்றுக்கு பயன்படுத்த 4 மின் அடுப்புகள் கொள்முதல் செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. அதனை சம்மந்த விநாயகர் சன்னதியில் வைத்து பூஜை செய்த பிறகு, பயன்படுத்த தொடங்கியுள்ளனர். அதோடு, திருக்கோயில் பணிக்கு காஸ் சிலிண்டர் கூடுதலாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோயில் நிர்வாகத்தின் சார்பில் காஸ் ஏஜென்சி நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. எனவே, விரைவில் நிலைமை சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
