திருவண்ணாமலை, ஏப்.9: திருவண்ணாமலையில் 4 கி.மீ. தூரம் நடந்து சென்று பொதுமக்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது, பொதுமக்கள் ஆர்வமுடன் முதல்வருடன் கைகுலுக்கி வாழ்த்தும், அவர் நிறைவேற்றியுள்ள திட்டங்களுக்கு நன்றியும் தெரிவித்தனர். திருவணணாமலையில் மாநகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள கலைஞர் திடலில் நேற்று மாலை திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்த பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்பதற்காக திருவண்ணாமலை வந்திருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று காலை 7 மணியளவில் நடைபயிற்சி மேற்கொண்டார். திருவண்ணாமலை மாட வீதியில் திருவூடல் தெருவில் தொடங்கி, தேரடி வீதி, காந்திசிலை சந்திப்பு, சின்னக்கடை தெரு, பழைய பஸ் நிலையம், அறிவொளி பூங்கா, போளூர் சாலை, அண்ணா நுழைவு வாயில் வரை சுமார் 4 கிமீ தூரம் நடந்து சென்று, திமுக வேட்பாளர்கள் திருவண்ணாமலை தொகுதி அமைச்சர் எ.வ.வேலு, கீழ்பென்னாத்தூர் தொகுதி துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
திருவூடல் தெரு கடலைக்கடை சந்திப்பு பகுதியில் உள்ள காய்கறி மார்க்கெட் பகுதிக்கு சென்ற முதல்வருக்கு, அங்கிருந்த வியாபாரிகள் பூங்கொத்து ெகாடுத்து வரவேற்றனர். மேலும், அந்த பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர்கள், முதல்வருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அப்போது, நீங்கள் சாப்பிட்டீங்களா என முதல்வர் விசாரித்தார். அதற்கு, நாங்கள் நன்றாக இருக்கிறோம். எங்களை எல்லாம் நீங்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும், உங்களின் திட்டங்கள் எல்லாம் எங்களுடைய குடும்பங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது என மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து, தேரடி தெருவில் கோயிலுக்கு சென்றுகொண்டிருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள், அங்கிருந்த வியாபாரிகள் அனைவரும் முதல்வருக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும், வழிநெடுகிலும் இளைஞர்கள், மாணவர்கள், சிறுவர்கள், தாய்மார்கள் என அனைத்துத்தரப்பு மக்களும் ஆர்வமுடன் ஓடிவந்து முதல்வருக்கு கைகூப்பி நன்றியும், வாழ்த்தும் தெரிவித்தனர். பஸ் நிலையம் ரவுண்டானா சந்திப்பு பகுதியில் சாலையோரம் நின்றிருந்த மூதாட்டி ஒருவர் முதல்வரின் அருகே சென்று, அவரது கைகளை பற்றி, மகளிர் உரிமைத்தொகையால் நான் நிம்மதியாக இருக்கிறேன். நிச்சயம் நீங்கள்தான் ஜெயிப்பீர்கள் என கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல், பள்ளிக்கு சென்றுகொண்டிருந்த மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் ஆகியோர் முதல்வரை பார்த்ததும் ஓடிவந்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
அப்போது, என்ன படிக்கிறீர்கள் என விசாரித்த முதல்வர், படிப்பு முக்கியம் நன்றாக படிக்க வேண்டும் என கூறினார். அண்ணா நுழைவு வாயில் அருகே தனது தந்தையுடன் வந்திருந்த குழந்தை, முதல்வரின் கன்னத்தில் முத்தமிட்டது. எனவே, குழந்தையின் பேரன்பினால் முதல்வர் நெகிழ்ச்சி அடைந்தார். திருவண்ணாமலையில் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென முதல்வர் மேற்கொண்ட நடைபயிற்சியின்போது, மக்கள் ஆர்வத்துடன் வெள்ளமென திரண்டு வந்து தங்கள் ஆதரவையும் வரவேற்பையும் அளித்தது, திமுகவின் மகத்தான வெற்றிக்கு சாட்சியாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
