*2 ஆயிரம் மாணவிகள் பங்கேற்பு
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி 6 வினாடிகளில் “என் வாக்கு, என் உரிமை\” என்ற வாசகம் ஒரே நேரத்தில் எழுதி, கின்னஸ் உலக சாதனை புரியும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதியில் வருகிற 23ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்தல் திருவிழா, தமிழ்நாட்டின் பெருவிழா என்கிற கருப்பொருளுடன் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப் படுகிறது.
அதன்படி, கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், கல்லூரி நிர்வாகம், ஜேசிஐ கிருஷ்ணகிரி மற்றும் தனியார் மருத்துவமனை சார்பில், 2000க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் 6 வினாடிகளில் “என் வாக்கு, என் உரிமை” என்கிற வாசகம் ஒரே நேரத்தில் எழுதி கின்னஸ் உலக சாதனை புரியும் நிகழ்ச்சி நடந்தது.
இந்நிகழ்ச்சியை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் தினேஷ்குமார் தொடங்கி வைத்து பேசியதாவது: அரசு மகளிர் கலை கல்லூரியில் பயிலும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சரியாக 6 வினாடிகளில் ‘என் வாக்கு, என் உரிமை” என்ற வாசகத்தை, ஒரே நேரத்தில் எழுதி உலக சாதனை படைத்துள்ளனர்.
100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி இந்த விழிப்புணர்வு வாசகம் தேர்ந்தெடுக்கப் பட்டது. வாக்கு என்பது உங்களின் அதிகாரம், ஒரு நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் வலிமை உங்கள் ஒரு வாக்கிற்கு உண்டு.
எனவே, வாக்காளர்கள் அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும், என்றார். இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் கவிதா, கல்லூரி முதல்வர் கீதா, தனியார் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் சிவக்குமார், ஜேசிஐ அமைப்பு கோகுல் சின்னசாமி, தேர்தல் விழிப்புணர்வு ஒருங்கிணைப்பாளர்கள் புவனேஸ்வரி, சித்ராதேவி மற்றும் பேராசிரியர்கள், மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
