ஊட்டி : ஊட்டி அருகே நஞ்சநாடு பகுதியில் பகல் நேரத்தில் தேயிலை தோட்டத்தில் ஓய்வெடுத்த சிறுத்தையால் அந்த பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில் காட்டுமாடு, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளது. ஆனால் அதற்கேற்ப வனப்பரப்பு இல்லாதது, வனத்தை ஒட்டிய பகுதிகளில் கட்டுமானங்கள் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் அடிக்கடி தென்படுவது அதிகரித்துள்ளது.
அவ்வாறு வரும் சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் கால்நடைகளை வேட்டையாடி வருகின்றன. சில சமயங்களில் மனிதர்களையும் தாக்கும் சம்பவங்களும் ஏற்படுகின்றன. இதனால் அந்த பகுதிகளில் அவ்வப்போது மனித-வன விலங்கு மோதல் நிகழ்கின்றன. கடந்த சில நாட்களுக்கு முன் நுந்தளாமட்டம் தனியார் தேயிலை தோட்டத்தில் உள்ள ஒரு சில்வர் ஓக் மரத்தில் சிறுத்தை ஓய்வெடுத்தது.இதே போல குன்னூர் பகுதியில் காட்டுமாடு குட்டியை வேட்டையாடி மரத்தில் தொங்கவிட்ட வீடியோக்கள் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஊட்டி அருகே நஞ்சநாடு பகுதியில் தேயிலை தோட்டத்தில் சிறுத்தை ஒன்று பகல் நேரத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. அந்த வழியாக வாகன ஓட்டிகள் வந்ததை பார்த்து சற்று சுதாரித்த சிறுத்தை சிறிது நேரம் அங்குமிங்கும் நோட்டமிட்டவாறு உடனடியாக வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இந்த சம்பவத்தை அந்த வழியாக சென்ற உள்ளூர் மக்கள் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி குன்னூர் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் மிகப்பெரிய அளவில் அதிகரித்திருப்பதால் பலரும் அச்சமடைந்துள்ளனர்.
