தேர்தல் ஆணையத்தின் ஒருதலைபட்ச நடவடிக்கை; தமிழகத்தில் மேலும் பல அதிகாரிகளை மாற்ற திட்டம்: திமுக உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்

 

சென்னை: தமிழகத்தில் நேர்மையான ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் பல அதிகாரிகளை மாற்றவும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் கேரளா, புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் எந்தவொரு முக்கிய அதிகாரியையும் தேர்தல் ஆணையம் மாற்றவில்லை. ஆனால், தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதை உறுதி செய்யும் பொருட்டு, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் மட்டும் உயர்மட்ட அளவில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

சட்டமன்ற தேர்தல் நடைப்பெறவுள்ள தமிழகத்தில் பொறுப்பு டிஜிபியாக இருந்த வெங்கட்ராமன் மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக சந்தீப் ராய் ரத்தோர் புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த முருகானந்தம் மாற்றப்பட்டு, அவருக்குப் பதில் சாய்குமார் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த அருண் அதிரடியாக மாற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக, 1997ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான அபின் தினேஷ் மோதக் நியமிக்கப்பட்டுள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றப்பட்டு, அவருக்குப் பதில் சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தவிர தாம்பரம் மற்றும் மதுரை மாநகர காவல் ஆணையர்கள் மாற்றப்பட்டுள்ளனர். மேலும், தூத்துக்குடி மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியர்களும் அதிரடியாக மாற்றப்பட்டு புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள அபின் தினேஷ் மோதக், மிகுந்த அனுபவம் வாய்ந்த அதிகாரி ஆவார். இவர் மாநில குற்ற ஆவண காப்பகம், பொருளாதார குற்றப்பிரிவு ஆகியவற்றில் பணியாற்றியதோடு, மத்திய புலனாய்வு அமைப்புகளான சிபிஐ மற்றும் தேசிய புலனாய்வு முகமை ஆகியவற்றிலும் பணியாற்றியுள்ளார். இந்த நியமனத்திற்கு முன்னதாக இவர் குற்றப்பிரிவு மற்றும் அமலாக்கப்பிரிவு ஏடிஜிபியாகப் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தைப் போலவே, தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்த சில நாட்களிலேயே மேற்கு வங்கத்திலும் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தன. அம்மாநில தலைமைச் செயலாளர், டிஜிபி மற்றும் கொல்கத்தா காவல் ஆணையர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் மாற்றப்பட்டனர்.
தேர்தல் ஆணையத்தின் இந்த ஒருதலைப்பட்சமான அதிரடி நடவடிக்கைகள் குறித்துப் பல்வேறு அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ளன. கேரளா, அசாம் போன்ற மாநிலங்களில் மாற்றங்கள் இல்லாத நிலையில், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் மட்டும் இத்தகைய பெரிய அளவிலான மாற்றங்கள் ஏன் செய்யப்பட்டன என்பதும், பாஜக ஆளாத மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் மட்டும் மாற்றம் செய்திருப்பது தற்போது அரசியல் களத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

குறிப்பாக தமிழகத்தில் நேர்மையான அதிகாரிகள் பலரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு காரணம், தமிகத்தில் நிர்வாகத்தில் குழறுபடி செய்ய வேண்டும் என்பதற்காகவே மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாற்றபட்ட அதிகாரிகளுடன், தற்போது நியமிக்கப்பட்டுள்ளவர்களை ஒப்பிட்டால் அவர்களின் நேர்மையும், திறமையும் எளிதாக கணக்கிட முடியும். ஆனாலும் வேண்டும் என்றே தேர்தல் ஆணையம் தமிழக அதிகாரிகளை மாற்றிவிட்டு வடமாநில அதிகாரிகளாக நியமனம் செய்து வருகின்றனர்.

இதற்கு பாஜகவின் திட்டமிட்ட சதிதான் காரணம் என்றும் கூறப்படுகிறது. அதேநேரத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்ட அதிகாரியை நியமித்ததற்கும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இதற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தற்போது கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் தமிழக உள்துறை செயலாளர் தீரஜ்குமார், உளவுத்துறை ஐ.ஜி.செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகளை தேர்தல் ஆணையம் ஓரிரு நாளில் மாற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: