மரத்தின் உச்சியில் காட்டுமாட்டின் கன்றை தொங்கவிட்டு சென்ற சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு

குன்னூர் : குன்னூர் அருகே மரத்தின் உச்சியில் காட்டுமாட்டின் கன்றை தொங்கவிட்டு சென்ற சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

​நீலகிரி மாவட்டம் குன்னூர் வனச்சரகத்திற்குட்பட்ட உலிக்கல் அருகே உள்ள ட்ரூக் செல்லும் சாலையில் நான்சச் எஸ்டேட் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் உள்ள ஒரு உயரமான சில்வர் ஓக் மரத்தின் உச்சிக்கிளையில் காட்டுமாடு கன்று ஒன்று இறந்த நிலையில் கிடப்பதாக வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

இந்த ​தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்று வனத்துறையினர் ஆய்வு செய்தபோது, அந்த கன்றைச் சிறுத்தை வேட்டையாடி இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும் சிறுத்தை வேட்டையாடிய இரையை மற்ற விலங்குகளிடமிருந்து பாதுகாக்க மரத்தின் மீது ஏற்றி வைக்கும் பழக்கம் கொண்டவை. அந்த அடிப்படையில் இந்த கன்று குட்டியையும் சிறுத்தை மரத்தின் உச்சிக்குக் கொண்டு சென்றுள்ளது தெரியவந்தது.

மரத்தில் சிறுத்தை ஏறியதற்கான ஆழமான நகக்கீறல்கள் அறிந்ததைஅடுத்து ​வனத்துறையினர், ​மாவட்ட வன அலுவலர் காஷ்யப் ஷசாங் ரவி உத்தரவின் பேரில், குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையிலான வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.

சிறுத்தை மீண்டும் தனது இரையைத் தேடி அதே இடத்திற்கு வரும் என்பதால், இறந்த கன்றுக்குட்டியின் உடலை அகற்றாமல் மரத்திலேயே விட்டுவிட்டு, அதைச் சுற்றிலும் நவீன கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

சிறுத்தை ஊருக்குள் நுழைவதைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.​ தேயிலைத் தோட்டப் பகுதிகளில் சிறுத்தையின் நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளதால், எஸ்டேட் தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மாலை மற்றும் இரவு நேரங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறை தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: