நடிகர் ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: போயஸ் கார்டனில் பலத்த பாதுகாப்பு

 

சென்னை: சென்னை டிஜிபி அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு இன்று சனிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில் போயஸ் கார்டன் பகுதியில் உள்ள நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் ஆகியோரின் வீடுகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மிரட்டலைத் தொடர்ந்து, தேனாம்பேட்டை போலீசார் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் போயஸ் கார்டன் பகுதிக்கு விரைந்தனர்.

மோப்ப நாய்கள் உதவியுடன் இரு நடிகர்களின் இல்லங்களிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தீவிரச் சோதனையில் ஈடுபட்டனர். முன்னதாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு இது போன்ற போலி மிரட்டல்கள் விடுக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது வரை சந்தேகத்திற்குரிய பொருட்கள் ஏதும் கண்டறியப்படவில்லை என்றாலும், பாதுகாப்பு கருதி போயஸ் கார்டன் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த மின்னஞ்சலை அனுப்பிய நபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து போலீஸ் தரப்பில், ‘மின்னஞ்சல் வந்த முகவரியை வைத்து மர்ம நபரை தேடி வருகிறோம், இது வெறும் வதந்தியா அல்லது சதியா என்பது விரைவில் தெரியவரும்’ என்று கூறப்பட்டது. ஒரே நேரத்தில் இரு முன்னணி நடிகர்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால், ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: