வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி ஊட்டியில் சைக்கிள் பேரணி

ஊட்டி : வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி ஊட்டியில் சைக்கிள் பேரணி நடந்தது.தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்கும் நோக்கில் பொதுமக்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விளையாட்டு போட்டிகள், கோலப்போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், உறுதிமொழி ஏற்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக இளம் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் நீலகிரி பூச்சிப்பிடிப்பான் (நீலகிரி பிளை கேட்ச்சர்) சின்னம் வெளியிடப்பட்டுள்ளது. சின்னத்துடன் மலையின் குரல், நம் வாக்கு! என்ற விழிப்புணர்வு வாசகம் இடம் பெற்றுள்ளது.

சின்னத்திற்கு நீலா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. 3 சட்டமன்ற சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் இளம் வாக்காளர்கள் மற்றும் வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக வாக்களிப்பதன் அவசியம் குறித்த சைக்கிள் பேரணி ஊட்டியில் நடந்தது. மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட மைதானம் அருகே நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கொடியசைத்து பேரணி துவக்கி வைத்தார். பேரணியில் பங்கேற்ற 75க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளுடன் ஊட்டி நகரில் பேரணியாக சென்றனர்.

சேரிங் கிராஸ், கமர்சியல் சாலை, லோயர் பஜார் சாலை வழியாக சென்று படகு இல்லத்தில் பேரணி நிறைவடைந்தது. கூடுதல் ஆட்சியர் அபிலாஷா கவுர், மாவட்ட விளையாட்டு அலுவலர் இந்திரா, ஆவின் பொது மேலாளர் ராஜேஷ் குமார், ஊட்டியைச் சேர்ந்த தேசிய சைக்கிள் பந்தய வீரர் நாத் லட்சுமி காந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: