திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர் தேன்மொழி. இவர் இத்தொகுதியில் கடந்த 2006, 2019 (இடைத்தேர்தல்), 2021 ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்துள்ளார். இவருக்கு இம்முறையும் நிலக்கோட்டையில் போட்டியிட சீட் கிடைத்தது. இதற்கிடையே நிலக்கோட்டை தொகுதியில் திமுக சார்பில் முதல் பெண் வேட்பாளராக நாகஜோதி அறிவிக்கப்பட்டார். பிரசாரத்தை துவக்காமல் இருந்த தேன்மொழி நேற்று தான் முதல்நாள் பிரசாரத்தை துவக்கினார். மெட்டூரில் பிரசாரம் மேற்கொண்டபோது தேன்மொழியிடம் பொதுமக்கள், ‘‘நிலக்கோட்டையில் கடந்த 15 ஆண்டுகளாக அதிமுக தான் வெற்றி பெற்றுள்ளது. அதிலும் நீங்கள் தான் எம்எல்ஏவாக இருந்துள்ளீர்கள். ஆனால் எங்கள் கிராமத்து சாலை 15 ஆண்டுகளாகவே குண்டும், குழியுமாகத்தான் இருக்கிறது. குடிநீர் பற்றாக்குறையும் உள்ளது.
இதுகுறித்து உங்களிடம் பலமுறை சொல்லியும் நீங்கள் கண்டுகொள்ளவில்லை’’ என ஆவேசமாக கேள்வி எழுப்பினர். இதனால் ஆத்திரமடைந்த அதிமுக நிர்வாகிகள், வேட்பாளர் தேன்மொழி முன்பே கேள்வி கேட்ட 2 பேரை எட்டி உதைத்து தாக்கினர். இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்தவர்களை கண்ட பெண்கள் கூச்சலிட்டு தாக்கியவர்களை விரட்டியடித்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதையும் கண்டுகொள்ளாத தேன்மொழி தொடர்ந்து பேசி கொண்டே அடுத்த ஸ்பாட்டுக்கு நடையை கட்டினார். பின்னர் கமலாபுரம் பிரிவில் பிரசாரத்தில் ஈடுபட்டபோது தேன்மொழியிடம் பொதுமக்கள், ‘‘குடிநீர் 15 நாட்களுக்கு ஒருமுறை தான் வருகிறது. இதுதொடர்பாக உங்களிடம் பலமுறை சொல்லியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ என்றனர். இங்கும் மழுப்பான பதிலை கூறியபடி தேர்தல் பிரசாரத்தை பாதியிலே முடித்து கொண்டு கிளம்பி விட்டார்.
* மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்பது உறுதி: பிரேமலதா, வைகோ திட்டவட்டம்
தர்மபுரி தொகுதியில் தேமுதிக சார்பில் டாக்டர் இளங்கோவனை ஆதரித்து பிரேமலதா பேசியதாவது: நம் எதிராளிகள் எத்தனை கோடி வேண்டுமானாலும் கொட்டட்டும். என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். மக்கள் போற்றும் கூட்டணி நமது கூட்டணி. 200 தொகுதிக்கு மேல் வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் மீண்டும் 2வது முறையாக முதலமைச்சராக பதவியேற்பது உறுதி. திமுக 7வது முறை ஆட்சி அமைப்பது உறுதி.
இவ்வாறு பேசினார்.
வைகோ உறுதி: சீர்காழி தொகுதி மதிமுக வேட்பாளர் செந்தில்செல்வனை ஆதரித்து வைகோ பேசியதாவது: தேர்தல் கமிஷன் எடுபிடி கமிஷனாகிவிட்டது. அதனால் தான் தலைமை செயலாளர் திடீரென்று மாற்றப்படுகிறார். பழனிசாமிக்கு ஏஜென்டாக இருந்த சாய்குமாரை தலைமை செயலாளராக போட்டு இருக்கிறீர்களே. தமிழக முதல்வர் மீண்டும் முதல்வராவார், அதனை யாரும் தடுக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.
* புதுச்சேரி பாஜ அமைச்சர் தொகுதியில் கள்ளஓட்டு: காங்கிரஸ் வேட்பாளர் பரபரப்பு வீடியோ
புதுச்சேரியில் நேற்று முன்தினம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மண்ணாடிப்பட்டு தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. இத்தொகுதியில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பாஜ வேட்பாளராக போட்டியிடுகிறார். முன்னாள் துணை சபாநாயகர் டி.பி.ஆர் செல்வம் காங்கிரஸ் வேட்பாளராக உள்ளார். மண்ணாடிப்பட்டு சமுதாய கூடத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நேரம் முடியும் தருவாயில் வாலிபர் சந்தேகப்படும்படியாக வந்தார். அவரை காங்கிரசார் பிடித்து விசாரித்ததில் பாஜவிற்கு கள்ள ஓட்டு போட வந்ததாக தெரிவித்தார். இதையடுத்து உடனே அவரை பிடித்து திருக்கனூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அந்த வாலிபர் மீது போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனை கண்டித்து டிபிஆர் செல்வம் தலைமையில் 300க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தை முற்றுகை போராட்டம் நடத்தினர். இதுகுறித்து காங்கிரஸ் வேட்பாளர் டிபிஆர்.செல்வம் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘மண்ணாடிப்பட்டு 14வது பூத்தில் 2 பேர் கள்ள ஓட்டு போட வந்தனர். எங்களது முகவர் அவரை தடுத்தார். அதையும் மீறி ஓட்டு போட்டுவிட்டு வெளியே வந்தனர். அவர்களை யார் ஓட்டு போட அனுப்பினார்களோ அவர்களே அவர்களை தப்பிக்க செய்தனர். எங்களது கட்சிக்காரர்கள் அவர்களை துரத்தி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதற்கு காரணம் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தான்’ என்றார்.
