தமிழ்நாடு அரசு வழங்கும் நெல்லுக்கான ஊக்கத்தொகையை நிறுத்துங்கள்: ஒன்றிய அரசு கடிதம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு தகவல்; எடப்பாடி பழனிசாமி இதற்கு வாய் திறப்பாரா என்றும் கேள்வி

தஞ்சை: தமிழ்நாடு அரசு வழங்கும் நெல்லுக்கான ஊக்கத்தொகையை நிறுத்தக் கோரி ஒன்றிய அரசு கடிதம் எழுதியுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், விவசாயி என சொல்லிக்கொள்ளும் பச்சை துண்டு பழனிசாமி இதற்கு வாய் திறந்து கண்டிப்பாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். தஞ்சாவூர் திலகர் திடலில் நேற்று நடந்த திமுக கூட்டணி தேர்தர் பிரசார பொதுக்கூட்டத்தில் திருவையாறு வேட்பாளர் துரை. சந்திரசேகரன், தஞ்சை சண்.ராமநாதன், ஒரத்தநாடு வைத்திலிங்கம், பட்டுக்கோட்டை அண்ணாதுரை, பேராவூரணி அசோக்குமார், திருவிடைமருதூர் கோவி.செழியன், கும்பகோணம் அன்பழகன், பாபநாசம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் ஷாஜகான் ஆகியோரை ஆதரித்து, திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமாக மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நம்முடைய சாதனையைச் சொல்லும் இதே நேரத்தில் இன்னொரு அதிர்ச்சியான செய்தியையும் உங்களிடம் சொல்லியாக வேண்டியிருக்கிறது. சீர்காழி, கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய ஊர்களில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு, நான் சென்னைக்குச் சென்றேன்.

சென்றதும், அதிகாரிகள் ஒரு கடிதத்தை என்னிடம் காண்பித்தார்கள். அது என்ன தெரியுமா? பழனிசாமியின் ஓனராக இருக்கும் ஒன்றிய பா.ஜ அரசு தமிழ்நாடு அரசுக்கு அனுப்பியிருக்கும் கடிதம் அது. இப்படிகூட ஒருவரால் யோசிக்க முடியுமா என்பதுபோன்று, அந்தக் கடிதம் அமைந்திருக்கிறது. அதில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றால், “தமிழ்நாடு அரசு வழங்கும் ஊக்கத் தொகையால், நெல் உற்பத்தி நிறைய பெருகி வருகிறதாம். அப்படி பெருகும் காரணத்தால், பல்வேறு பிரச்னைகள் உருவாகிறதாம். அதனால், தமிழ்நாடு அரசு நெல்லுக்கு வழங்கிக் கொண்டு இருக்கும் ஊக்கத் தொகையை மறுபரிசீலனை செய்ய வேண்டுமாம்.” என்ன கொடுமை பாருங்கள்.

மொத்தத்தில், “நெல்லுக்கு ஊக்கத் தொகை வழங்கக் கூடாது” என அறிவுறுத்தி ஒன்றிய அரசு நமக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார்கள். அதுவும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என மூச்சுக்கு மூச்சு சொல்லிக் கொள்ளும் அம்மையார் நிர்மலா சீதாராமன் அவர்களின் நிதியமைச்சகம்தான் இந்தக் கடிதத்தை அனுப்பியிருக்கிறது. உண்மையிலேயே தமிழர் என்ற உணர்வு இருந்தால் இதற்காவது, பழனிசாமி வாய் திறந்து அவர்களின் ஓனரான பாஜ கண்டிப்பாரா? வெட்கம், மானம், சூடு, சொரனை இருந்தால் பாஜவை கண்டிக்க எடப்பாடி தயாரா? இல்லை. அசிங்கமாக, வழக்கம்போல, அவதூறு பேச மட்டும்தான் அவர் வாய் திறப்பாரா? விவசாயிகளுக்கு எவ்வளவு பெரிய துரோகம் இது?

இன்னொரு முக்கியமான விஷயத்தை உங்களிடம் நான் நினைவுபடுத்துகிறேன். நான்காண்டு காலம் முதலமைச்சராக இருந்த ‘போலி விவசாயி’ பழனிசாமி ஆட்சியில், தமிழ்நாட்டுக்கு உணவளிக்கும் வேளாண் பெருமக்களுக்கு மாநில அரசு வழங்கும் நெல்லுக்கான ஊக்கத் தொகையை ‘ஒரு ரூபாய்’கூட அவர் உயர்த்தித் தரவில்லை. பச்சைத் துண்டை போட்டுக் கொண்டு, பழனிசாமி விவசாயிகளுக்கு செய்ததெல்லாம் பச்சைத் துரோகம்தான்! இதுவே, நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் இந்த ஊக்கத்தொகையைச் சன்ன ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு, 70 ரூபாயில் இருந்து 156 ரூபாயாகவும்; பொது ரக நெல்லுக்கு, குவிண்டால் ஒன்றுக்கு 50 ரூபாயில் இருந்து 131 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கியிருக்கிறோம்.

இதன்மூலம், “நெல்லுக்கு, குவிண்டால் ஒன்றுக்கு 2,500 ரூபாய் வழங்குவோம்” என்று 2021-ஆம் ஆண்டு தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொன்னதைச் செய்து காட்டியிருக்கிறோம். கடந்த ஐந்து ஆண்டுகளில், ஊக்கத் தொகையாக மட்டும் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு, இதனால், சுமார் 30 லட்சம் விவசாயிகள் பயனடைந்திருக்கிறார்கள். நான் மீண்டும் இந்த தஞ்சை மண்ணில் நின்று உறுதியாக சொல்கிறேன்… நெல் குவிண்டால் ஒன்றுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் என, 2021-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் சொன்னோம்! சொன்னபடியே செய்தோம்! அதேபோன்று, இப்போது 2026 தேர்தல் அறிக்கையில் சொல்லியிருப்பது போன்றே, அடுத்து அமையவுள்ள திராவிட மாடல் 2.0 ஆட்சியில், குவிண்டால் ஒன்றுக்கு 3,500 ரூபாய் வழங்கப் போகிறோம் என்று உறுதியாக சொல்கிறேன்!

ஒன்றிய பா.ஜ. அரசும், அடிமை பழனிசாமியின் அ.தி.மு.க.வும் சேர்ந்து இதை தடுக்க என்ன முயற்சி செய்தாலும், எவ்வளவுதான் தடுக்க திட்டமிட்டாலும், அதையெல்லாம் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் முறியடிப்பான். உலகத்திற்கே உணவளிக்கும் விவசாயிகளுக்கு உரிய விலையை நான் நிச்சயம் உறுதி செய்வேன்! முடிந்தால் தடுத்துப் பாருங்கள்! பழனிசாமி ஆட்சியில் விவசாயிகளுக்கு செய்யப்பட்டது எல்லாம் வெறும் வேதனைகள்தான்! விவசாயிகளுக்கு அவர் செய்த துரோகங்கள் ஒன்றா? இரண்டா? அதை எல்லாம் சொல்ல ஒரு நாள் போதுமா? போதாது.

‘காவிரி காப்பாளர்’ என்று தனக்குத் தானே பட்டப் பெயர் வைத்துக் கொண்டார். அவர் உண்மையான விவசாயியாக இருந்தால், இந்தியா முழுவதும் உழவர் பெருமக்கள் எதிர்த்துப் போராடிய மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்திருப்பாரா? போராட்டம் செய்த விவசாயிகளை ‘புரோக்கர்கள்’ என்று வாய்கூசாமல் சொன்ன புளுகுமூட்டைதான், இந்தப் பழனிசாமி. அ.தி.மு.க. ஆட்சியில் இந்த டெல்டா மாவட்டங்களில் இயற்கைச் சீற்றம் நடந்தபோது இங்குள்ள மக்களை காப்பாற்றினாரா பழனிசாமி?

இந்த டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த அன்றைய அமைச்சர் ஓ.எஸ். மணியன் வந்தபோது, மக்களே விரட்டியடித்தார்களே… சுவர் மேல் ஏறிக் குதித்து, அவர் தப்பித்து ஓடும் நிலையெல்லாம் ஏற்பட்டது! நீங்களெல்லாம் வீடியோவில் பார்த்திருப்பீர்கள். அதெல்லாம் நினைவில்லையா? விவசாயிகளுக்கான பி.எம். கிசான் திட்டத்தில் 110 கோடி ரூபாய் ஊழல் நடந்ததும் அ.தி.மு.க. ஆட்சியில்தான். விவசாயிகளுக்குச் சேர வேண்டிய நிதியை யாருக்கோஞ் கொடுத்தார் பழனிசாமி. இதுதான் போலி விவசாயியான பழனிசாமி ஆட்சி செய்த லட்சணம்! இப்படிப்பட்டவர் யாருடம் சேர்ந்திருக்கிறார்? பிரதமர் மோடி தலைமையிலான என்டிஏ கூட்டணியில்… இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

* வெட்கம், மானம், சூடு, சொரனை இருந்தால் பாஜவை கண்டிக்க எடப்பாடி தயாரா? இல்லை. அசிங்கமாக, வழக்கம்போல, அவதூறு பேச மட்டும்தான் அவர் வாய் திறப்பாரா? விவசாயிகளுக்கு எவ்வளவு பெரிய துரோகம் இது?
* எவ்வளவுதான் தடுக்க திட்டமிட்டாலும், அதையெல்லாம் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் முறியடிப்பான். உலகத்திற்கே உணவளிக்கும் விவசாயிகளுக்கு உரிய விலையை நான் நிச்சயம் உறுதி செய்வேன்! முடிந்தால் தடுத்துப் பாருங்கள்!

* தேர்தலில் தில்லுமுல்லும் செய்ய மோடி திட்டம்
‘‘வணிக சிலிண்டர்களின் விலையை ஏற்றி வியாபாரிகள் தலையில் இடியை இறக்கியிருக்கும் மோடி அவர்கள். நாடு முழுவதும் வணிக சிலிண்டர்களின் விலை 203 ரூபாய் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் வணிகர்கள் மட்டுமல்ல, எல்லோருமே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஓட்டலில் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக எகிறிவிட்டது. 12 ரூபாய் டீ; இப்போது 15 ரூபாயாக உயர்ந்துவிட்டது. 15 ரூபாய் காபி; இப்போது 20 ரூபாய் ஆக உயர்ந்துவிட்டது. ஏற்கெனவே சிலிண்டர் தட்டுப்பாட்டால் பல உணவகங்களை மூடிவிட்டார்கள். பல ஓட்டல்களில் ஒரு சில ஐட்டம் மட்டும்தான் தயாரிக்கிறார்கள். ஓட்டல் நடத்துபவர்களுக்கு கஷ்டம், அங்கு வேலை செய்பவர்களுக்கும் இப்போது வேலை பறிபோய்விட்டது.

அவசர ஆலோசனைக் கூட்டம் என்று மோடி கூட்டம் கூட்டினார். ஆனால், உருப்படியாக எதுவும் பண்ணவில்லை. ஏன் என்றால், பா.ஜ ஆளாத மாநிலங்களில் அதிகாரிகளை எப்படி பந்தாடலாம் என்பதில்தான், ஒன்றிய அரசின் மொத்த கவனமும் இப்போது இருக்கிறது. தேர்தலில் தோற்கப் போகும் அச்சத்தில், ஏற்கெனவே வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் என்று கொண்டு வந்து, இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான மக்களின் வாக்குரிமையை பறித்திருக்கிறார்கள். அதை முடித்துவிட்டு அடுத்ததாக என்ன செய்கிறார்கள்? தமிழ்நாட்டில் தங்களுக்கு சாதகமான அதிகாரிகளை நியமித்து தேர்தலில் தில்லுமுல்லு பண்ணலாம் என்று பார்க்கிறார்கள்.

எத்தனையோ தேர்தல்களை தமிழ்நாடு பார்த்திருக்கிறது. அமைதியான தேர்தல்களுக்கு தமிழ்நாடுதான் பெஸ்ட் எக்சாம்பிள். அப்படிப்பட்ட நம்முடைய மாநிலத்தில் முதன்முறையாக தேர்தலை காரணம் காட்டி தலைமைச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளை இப்போது மாற்றியிருக்கிறார்கள். இவ்வளவு பயம் அவர்களுக்கு ஏன்? வாக்களிக்கப் போகும் மக்களே… திராவிட மாடல் 2.0 வேண்டும் என்று எப்போதோ முடிவு செய்துவிட்டார்கள். இதை ஏன் தேர்தல் ஆணையமும் – பா.ஜ.வும் உணராமல் இருக்கிறார்கள்?’’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Related Stories: