மோடிக்கு சவால் விட்ட ஜெ.வும் கூட்டணி வைத்த எடப்பாடியும்: வச்சி செஞ்சார் திருமாவளவன்

 

 

பண்ருட்டி: கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் விசிக வேட்பாளர் அப்துர் ரகுமானை ஆதரித்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் பேசியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் நடைமுறைப்படுத்தி கொண்டிருக்கின்ற மகளிர் விடியல் பயணத் திட்டம், நான் முதல்வர் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், காலை சிற்றுண்டி திட்டம், மகளிர் உரிமைத் தொகை 2000 ரூபாய் உயந்திட, முதியோர் உதவி தொகை 2000 ரூபாய் உயர்ந்திட திராவிட மாடல் ஆட்சி மீண்டும் தொடர வேண்டும்.

நடிகர் விஜய் கூட்டணிக்கு வாருங்கள்… வாருங்கள்… என்று அழைப்பு கொடுத்தும், ஆட்சியில் பங்கு என கூறியும் யாரும் அவர் தலைமையில் சேரவில்லை. 2024ல் அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளிட்ட பல கட்சிகள் விலகி போய் விட்டன. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். பாஜக உடன் எந்த அடிப்படையில் நீங்கள் கூட்டணி சேர்ந்தீர்கள்? எடப்பாடி பழனிசாமி இதற்கு விளக்கம் தருவாரா? ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போது பாஜகவுடன் கூட்டணி வைத்தது என் வாழ்வில் நான் செய்த மிகப்பெரிய தவறு என கூறினார்.

அதற்கு பரிகாரமாகத் தான் வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசையே நான் கவிழ்த்தேன் என்று சொன்னார். அது மட்டுமல்லாமல் 2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் மோடிக்கு சவால் விட்டவர் ஜெயலலிதா. மோடியா? இந்த லேடியா? மோதி பார்ப்போமா வா… என்று அழைத்தவர் ஜெயலலிதா. இது எடப்பாடிக்கு மறந்து போனதா? எந்த காலத்திலும், எதிர்காலத்திலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்காது என்று சொன்னீர்களா இல்லையா?

தேர்தல் பிரசாரத்தில் நீங்கள் கூட்டணி வைத்ததற்கான காரணத்தை விளக்காமல் பாஜகவும் நீங்களும் சேர்ந்து என்ன செய்யப் போகிறீர்கள் என்று சொல்லாமல் கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், முதல்வர் ஸ்டாலின் பற்றி தரம் தாழ்ந்து பேசுவது சரியா? இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

Related Stories: