தமிழக மகிளா காங்கிரஸ் தலைவி அதிரடி நீக்கம் கட்சி தலைமை மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கி விலகுவதாக ராகுலுக்கு கடிதம்: காங். கட்சியில் பரபரப்பு

சென்னை: தமிழக மகிளா காங்கிரஸ் தலைவி ஹசீனா சையத் அதிரடியாக நீக்கப்பட்டுள்ள நிலையில், கட்சி தலைமை மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கி காங்கிரசில் இருந்து விலகுவதாக ராகுலுக்கு கடிதம் எழுதியுள்ளது கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ப.சிதம்பரம் ஆதரவாளராக செயல்பட்டு வந்த தமிழக மகிளா காங்கிரஸ் தலைவி ஹசீனா சையத் வேளச்சேரி, மயிலாடுதுறையில் போட்டியிட வாய்ப்பு கேட்டு வந்தார். ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் சென்னை சத்தியமூர்த்தி பவனில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மூத்த தலைவர்கள் தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில், அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா ‘கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் ஹசீனா சையத் நீக்கப்பட்டார்’ என அறிக்கை வெளியிட்டார். இதை தொடர்ந்து கட்சியில் இருந்து விலகுவதாக மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, அல்கா லம்பா உள்ளிட்ட பலரையும் குறிப்பிட்டு, ஹசீனா சையத் ஒரு கடிதத்தை எழுதியுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது: 2026 சட்டசபை தேர்தலுக்கான சீட் ஒதுக்கீட்டில் எனக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பைக் கண்டித்து, நீண்டகாலமாக நான் நேசித்த கட்சியில் இருந்து வேதனையுடன் ராஜினாமா செய்கிறேன். மத்திய காங்கிரஸ் தேர்தல் குழுவும் உயர்நிலை தலைமையும் உறுதி அளித்தபோதிலும், சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு எனக்கு மறுக்கப்பட்டதே இந்த ராஜினாமாவுக்கு காரணம். இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோரின் 33 சதவீத மகளிர் இட ஒதுக்கீட்டு கனவு வெறும் வெற்றுப் பேச்சாகிவிட்டது. நானும், தமிழ்நாடு மகளிர் காங்கிரசை சேர்ந்த பல தகுதியான பெண்களும் சட்டசபை தேர்தலில் போட்டியிட ஒரு சீட்டு கூட ஒதுக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டதாலேயே ராஜினாமா செய்கிறேன்.

தகுதியுள்ள என்னைப் போன்ற பெண்களுக்கும், தமிழ்நாடு மகிளா காங்கிரசை சேர்ந்த வேறு சிலருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை. எங்களுக்கு ஒரு தொகுதிகூட ஒதுக்கப்படவில்லை. மகிளா காங்கிரஸ் தலைவராக இருக்கும் எனக்கு, கட்சித் தலைமை அநீதி இழைத்துவிட்டதாக நான் உணர்கிறேன். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயிடம் இதுகுறித்து முறையிட்டேன். ஆனால் வழக்கம்போல அது வீணாகிவிட்டது.

தற்போதுள்ள ஊழல் நிறைந்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் மற்றும் தற்போதைய ஜார்க்கண்ட் பொறுப்பாளர் ஸ்ரீவெல்ல பிரசாத் (முன்னாள் தமிழக பொறுப்பாளர்), மயிலாடுதுறை எம்.பி சுதா, ஓவர்சீஸ் காங்கிரசில் சாம் பிட்ரோடாவுடன் தொடர்புடைய புஷ்பராஜ் மற்றும் தற்போதைய தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் மற்றும் நிவேதித் ஆல்வா ஆகியோரின் தவறான உள்நோக்கங்களுக்கு ஆதரவாகவே மல்லிகார்ஜுன கார்கே செயல்பட்டுள்ளார்.

இந்த நிலையில் என்னால் தொடர்ந்து பதவியில் நீடிக்க முடியாது. எனக்கே நீதி மறுக்கப்படும்போது, என்னுடன் பணியாற்றும் சக பெண் நிர்வாகிகள் மற்றும் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு உரிமையை என்னால் எப்படி பெற்றுத் தர முடியும்? எனவே, தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் மாநில தலைவர் பதவியிலிருந்தும், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் ராஜினாமா செய்கிறேன். இருப்பினும், நமது கட்சி மீதும், காந்தி குடும்பத்தினர் மீதும் எப்போதும் அன்புடன் இருப்பேன்.

\\”கார்கேவை போன்ற ஒரு மூத்த தலைவர், ஊழல் நிறைந்த நமது மாநில தலைவரின் அமைப்பை இவ்வளவு தூரம் ஆதரிப்பது எப்படி என்று எனக்குப் புரியவில்லை. இவர்களின் இத்தகைய செயல்பாடுகளால் கட்சியின் உண்மையான தொண்டர்கள் கட்சியிலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலைமை சரிசெய்ய முடியாத அளவுக்கு மிகவும் மோசமாகிவிட்டது. இது கட்சிக்கு ஈடுசெய்ய முடியாத மிகப்பெரிய இழப்பாகும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: