தந்தை ராமதாஸ், மகன் அன்புமணி இடையே மோதல் ஏற்பட்டு பாமக இரண்டாக உடைந்தது. இதனால் அக்கட்சி 2 அணிகளாக பொதுத்தேர்தலை சந்திக்கிறது. இதில் அன்புமணிக்கு சாதகமாக அக்கட்சியின் சின்னம், கொடி அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் வழங்கிய நிலையில், அதை தடுக்கும் வகையில் நீதிமன்ற படிக்கட்டுக்களை தொடர்ந்து ஏறிய ராமதாசுக்கு அடுத்தடுத்து பின்னடைவே ஏற்பட்டன. பாமகவின் முழு அதிகாரமும் அன்புமணி வசம் சென்றடைய, தேர்தல் களத்தில் ெஜாலிக்க முடியாத நிலை ஏற்பட, ராமதாசிடமிருந்த ஆதரவாளர்கள் ஒருவர்பின் ஒருவராக அன்புமணி பக்கம் தாவத் தொடங்கினர்.
சசிகலாவின் அஇபுமமுகவுடன் கைகோர்த்த ராமதாஸ், கூட்டணி அறிவிப்பை தவிர சசிகலாவுடன் எந்தவித நிகழ்விலும் கலந்து கொள்ளாமல் உள்ளார். அவருடன் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடர்ந்த பிறகே நிர்வாகிகளின் விலகல் தொடர்கதையாகி வருவதால் ராமதாஸ் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளார். அவரது அணி சார்பில் செயல் தலைவரான காந்தி, கவுரவ தலைவரான ஜி.கே.மணி களமிறங்குவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்பார்த்த கூட்டணி அமையாததால் இருவரும் பின்வாங்கி விட்டனர். அவர்களே தங்களது பலத்தை உணர்ந்துவிட்ட நிலையில் இனியும் ராமதாசை நம்பியிருந்தால் பலனில்லை என்ற முடிவெடுத்தே படிப்படியாக அன்புமணி பக்கம் தைலாபுரம் ஆதரவு வட்டாரங்கள் சாய்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதுவும் ராமதாஸ் அணி சறுக்கலுக்கான முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
இதனிடையே இதுவரை மாம்பழத்துக்கு வாக்குகேட்டு வந்த ராமதாஸ், இத்தேர்தலில் தனது ஆதரவு பெற்ற 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தனது மகனிடம் உள்ள மாம்பழ சின்னத்தை எப்படியாவது இத்தேர்தலில் முடக்கி, அவரையும் பொது சின்னத்தில் நிற்க வைத்துவிட வேண்டுமென்ற ராமதாஸின் தொடர் முயற்சி கானல்நீராகும் நிலையே ஏற்பட்டுள்ளது. மாம்பழத்துக்கு பதிலாக அன்புமணிக்கு பொதுசின்னம் வழங்க வேண்டுமென்ற தனது தரப்பு கோரிக்கையை ஏற்க நீதிபதி மறுத்துவிட்ட நிலையில், ராமதாசின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் தைலாபுரம் வட்டாரமே சோகத்தில் மூழ்கியுள்ளது. அதே நேரத்தில் தேர்தல் பிரசாரம் முடிய இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், ராமதாஸ் சிலிண்டரை தூக்கி பிரசாரம் செய்வாரா என்ற கேள்வி எழுந்து உள்ளது.
* எடப்பாடி தொகுதியில் இந்த முறை மாற்றம் உறுதி: திமுக வேட்பாளர் காசி
1. இடைப்பாடி தொகுதியில் 6வது முறையாக போட்டியிடக்கூடிய எடப்பாடி பழனிசாமிக்கு எப்படி டப் கொடுக்க போகிறீர்கள்?
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் சாதனைகளே எங்களுக்குப் பெரும் பலம். கடந்த காலங்களில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் எடப்பாடி தொகுதிக்காக நாங்கள் முன்னெடுத்த வளர்ச்சிப் பணிகளை மக்களிடம் கொண்டு செல்வோம். மக்களின் ஆதரவு எங்களுக்குப் பரிபூரணமாக இருப்பதால், இந்தத் தேர்தலை மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்கொள்கிறோம்.
2. இடைப்பாடியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் திடீர் மாயமானது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
இந்த விவகாரத்திற்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இது மக்களின் கவனத்திற்கு விடப்பட்ட ஒன்று, அவர்கள் உண்மையை அறிவார்கள்.
3. அதிமுகவின் எஃகு கோட்டையை தகர்ப்பதற்கு என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்?
கடந்த ஐந்து ஆண்டுகளில் இடைப்பாடி பேரூராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் திமுக அரசு செய்துள்ள சிறப்புத் திட்டங்களை முன்னிறுத்துகிறோம். முதல்வரின் வழிகாட்டுதலின்படி தொகுதியின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துள்ளோம். மக்களை நேரடியாகச் சந்தித்து அவர்களின் குறைகளைத் தீர்த்து வருவதால், இந்த முறை இடைப்பாடி தொகுதியில் மாற்றம் உறுதி.
4. வெற்றிக்கனியை முதல்வருக்கு சமர்ப்பிப்பீர்களா?
இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று அந்த ‘வெற்றி கனியை’ தமிழக முதல்வருக்குச் சமர்ப்பிப்பது நிச்சயம். அதில் எவ்வித மாற்றுக் கருத்தும் ஐயப்பாடும் கிடையாது.
