தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கோவை வடக்குத் தொகுதி பாஜ வேட்பாளரான வானதி சீனிவாசன் தனது தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் கோவை வந்த ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலும், அவருக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து நேற்று காலை வடக்கு தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் அவர் பிரசாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீர் கால் வலி ஏற்பட்டு கணுக்காலில் வீக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவர் அவிநாசி ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனைக்கு சென்றார். அங்கு வானதி சீனிவாசனை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவரை ஓய்வெடுக்க அறிவுறுத்தி உள்ளனர். இதன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து கட்சி நிர்வாகிகள் கூறுகையில், கடந்த 2 நாட்களாக தொடர்ந்து நடைபயணம் செய்ததால் கணுக்காலில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. நாளை (இன்று) ஒரு நாள் ஓய்வு எடுத்தால் குணமாகி விடும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவுடன் அவர் மீண்டும் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்றனர். இதனிடையே அண்ணாமலை இன்று கோவை வடக்கு தொகுதியில் வானதிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டது. கோவை வடக்கு தொகுதியை பெறுவதில் வானதிக்கும், அண்ணாமலைக்கும் இடையே மோதல் இருந்து வந்த நிலையில், அண்ணாமலையுடன் பிரசாரத்தில் பங்கேற்க விரும்பாமல் உடல்நலக் குறைவு காரணம் காட்டி பின்வாங்கி இருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
* சினிமாவில் டைரக்டர் நடிக்க சொல்லி தருவார்… அரசியலில் அது முடியாது: விஜய்யை கலாய்த்த ப.சிதம்பரம்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் தேவகோட்டை அருகே காயாவயலில், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பிரசாரம் செய்து பேசுகையில், ‘‘நடிகர் விஜய் காரைக்குடிக்கு வந்தார். பேசாமல் போய் விட்டார். அரசியல் என்றாலே பேச்சுத்தான். சர்ச்சை தான், விவாதம் தான். அவர் தனது கருத்தை சொன்னால் தான் விவாதம் செய்ய முடியும். பத்திரிகையாளர்களை சந்திப்பதில்லை. மக்களை சந்தித்து பேசுவதில்லை. விஜய்க்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். நான் வாழ்த்துகிறேன். ஆனால் ஆட்சி செய்ய வேண்டும். எந்த திட்டத்தை செயல்படுத்தினால் மக்களுக்கு பயன் தரும். எந்த வகையில் பணத்தை செலவழித்தால் பலன் கிடைக்கும். ஆட்சி செய்வது என்பது எளிதான காரியம் அல்ல. சினிமாவில் நடிப்பு வரவில்லை என்றால், இயக்குநர் மறுபடியும் நடிக்க சொல்வார். அரசியலில் அது போன்று முடியாது. ஆட்சி செய்யக்கூடிய அனுபவம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உள்ளது’’ என்றார்.
