உட்கட்சி பிரச்னையில் பாமகவின் மாம்பழம் சின்னத்தை முடக்க கோரிய ராமதாஸ் மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உட்கட்சி பிரச்னை தொடர்பான உரிமையியல் வழக்கு முடிவுக்கு வரும்வரை மாம்பழம் சின்னத்தை முடக்கிவைக்க மறுத்த உரிமையியல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு அவசர வழக்காக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி.வி.தமிழ்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அன்புமணி மற்றும் வடிவேல் ராவணன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ஏற்கனவே வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கு செல்லத்தக்கதல்ல. இதை தள்ளுபடி செய்ய வேண்டும்.

ஏற்கனவே ராமதாஸ் தரப்பு வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம் ஒதுக்கப்பட்டு அதை அவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். புதுச்சேரியில் தேர்தலும் முடிந்துவிட்டது. அதனால் சின்னத்தை முடக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது. 2025 ஜூலையில் மாம்பழம் சின்னம் பாமகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பின்னர்தான் அன்புமணியை தலைவராக ஏற்கக்கூடாது என்று ராமதாஸ் தரப்பிலிருந்து தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் கொடுக்கப்பட்டது.
தந்தைக்கு எதிராக செயல்படவில்லை. தலைவர் யார் என்பதை உரிமையியல் நீதிமன்றம் தான் முடிவுசெய்யமுடியும். ராமதாஸ் எந்த பொதுக்குழுவும் நடத்தாமல் தன்னைத் தானே தலைவராக பிரகடனப்படுத்தி உள்ளார். கட்சி மீது அக்கறை இருந்தால் சின்னத்தை முடக்கக்கோரி அவர் வழக்கு தொடருவாரா என்று வாதிட்டனர்.

இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன், விதிகளின்படி அங்கீகரிக்கப்பட்ட கட்சி அங்கீகாரம் இழந்த பிறகு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட சின்னம் சலுகை அடிப்படையில் ஒதுக்கப்படும். தேர்தல் ஆணைய ஆவணங்கள் அடிப்படையில் பாமக அன்புமணி தரப்பிடம் உள்ளதால் சின்னத்தை அவரது தரப்புக்கு ஒதுக்கி அவருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. தேர்தல் நடைமுறைகள் முடிவடைந்து, வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பிரசாரமும் வாக்குப்பதிவு மட்டுமே மீதமுள்ளது என்று கூறினார். ராமதாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கட்சியின் நிர்வாகக் குழு கூடி தலைவராக ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏற்கனவே தேர்தல் ஆணையத்திடம் அளித்த மனு பரிசீலிக்கப்படாததால் தான் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தமிழ்ச்செல்வி, மாம்பழம் சின்னத்தை முடக்கிவைக்கக் கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related Stories: