புதுவையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் 82.2 சதவீதம் வாக்குப்பதிவு ஆன நிலையில் இம்முறை 91.23% வாக்குப்பதிவாகி உள்ளது. வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்ததற்கு 2 காரணங்கள் சொல்லப்படுகிறது. ஒன்று எஸ்ஐஆர் பணி, மற்றொன்று கரன்சி வெள்ளமாக பாய்ந்தது என்று கூறப்படுகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி முடிவடைந்து, பட்டியல் வெளியிடப்பட்டது.
அதில், புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களில் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கு முன்பாக 10 லட்சத்து 21 ஆயிரத்து 578 வாக்காளர்கள் இருந்தனர். எஸ்ஐஆர் பணிக்கு பிறகு 9 லட்சத்து 18 ஆயிரத்து 111 வாக்காளர்கள் உள்ளனர். இப்பணியில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 437 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இது முன்பு இருந்த வாக்காளர்களின் அடிப்படையில் பத்து சதவீதம் ஆகும்.
இதில் இறப்பு காரணமாக 20,798 பேரும் (2 சதவீதம்), குடிபெயர்ந்தோர் மற்றும் அவ்விடத்தில் வசிக்காதோர் என 80 ஆயிரத்து 645 பேரும் (8 சதவீதம்), பட்டியலில் இரண்டு முறை இருந்த 2,024 பேரும் நீக்கப்பட்டனர். வாக்காளர்கள் எண்ணிக்கை அடிப்படையில் புதுச்சேரியில் ராஜ்பவன் தொகுதியில் 18 சதவீதம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இரண்டாவதாக புதுவையில் உள்ள 23 தொகுதிகளிலும் கரன்சி வெள்ளமாக பாய்ந்ததாக கூறுகின்றனர்.
இதுகுறித்து மூத்த குடிமக்கள் கூறுகையில், ‘‘ஒவ்வொரு தேர்தலில் மூன்று இலக்கு எண்ணில் கரன்சி விநியோகம் செய்யப்படும். இந்த முறை ஒரு குடும்பத்துக்கு அரை லட்சம் வரை கரன்சி விளையாடி உள்ளது. இதுபோன்ற தேர்தல் இதுவரைக்கும் இல்லாத அளவு இம்முறை இருந்துள்ளது.
ஏழைகள் மட்டுமின்றி வசதி படைத்தவர்கள் வரை பணம் வாங்குவதில் ஆர்வம் காட்டினர்’’ என்றனர். கடந்த மார்ச் 15ம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது நாள் முதல் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. ஆனால் அதனையும் தாண்டி கரன்சி விளையாடியதால், வாக்குச்சாவடிக்கு வந்துள்ளனர் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.
