சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரத்தை ஆணாதிக்க பிரச்னையாக பார்க்கக் கூடாது: உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு காரசார வாதம்

புதுடெல்லி: சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரத்தை ஆண் ஆதிக்க பிரச்னையாக பார்க்க கூடாது என்று ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரத்தில் கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ம் தேதி வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் தொடர்பான வழக்கானது மூன்றாவது நாளாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இதையடுத்து அப்போது ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘இந்தியாவை பொருத்தமட்டில் பாலினம் அடிப்படையில் மட்டும் கட்டுப்பாடுகள் கிடையாது. குறிப்பாக பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் தேவி பகவதி கோயில்கள், ஆண்கள் பெண்கள் போல உடையணிந்து வரும் கோயில்கள் மற்றும் திருமணமான ஆண்கள் அனுமதிக்கப்படாத புஷ்கர் பிரம்மா கோயில் போன்ற பல்வேறு உதாரணங்கள் உள்ளது. அதனால் சபரிமலை ஐய்யப்பன் கோயில் பிரச்சனையை தனிப்பட்ட ஆணாதிக்க பிரச்சனையாக கண்டிப்பாக பார்க்க முடியாது. ஏனெனில் தனிநபர் வழிபாட்டு உரிமை சட்டப்பிரிவு 25 மற்றும் மதப்பிரிவினரின் நிறுவன உரிமைகள் பிரிவு 26 ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை ஏற்கனவே விளக்கி இருக்கிறது.

இதுகுறித்து முன்னதாக தாக்கல் செய்யப்பட்ட எழுத்துப்பூர்வமான வாதங்களில் எங்களது தரப்பில் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ஒன்றிய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நட்ராஜ்,‘‘குறிப்பாக சமய உரிமைகள் மூன்று நிலைகளில் பாதுகாக்கப்படுகின்றன. அதாவது முதலாவது பிரிவு 25(1), தனிநபர் சுதந்திரம் மற்றும் நம்பிக்கை ஆகும். இரண்டாவது பிரிவு 25(2), சமூக சீர்திருத்தத்திற்காக அரசிடம் உள்ள ஒழுங்குமுறை அதிகாரம் ஆகும். மூன்றாவது பிரிவு 26, மத நிறுவனங்கள் அல்லது உட்பிரிவுகளின் உரிமைகள் ஆகியவற்றை எடுத்துக்காட்டுக்கிறது.

இதில் பிரிவு 25 மற்றும் 26 ஒன்றையொன்று சார்ந்தவை ஆகும். தனிநபர்கள் இல்லாமல் ஒரு மதப்பிரிவு உருவாக முடியாது. பிரிவு 25(2) என்பது அரசை வழிநடத்தும் ஒரு சுதந்திரமான அதிகாரம் ஆகும். சமூகத் தீமைகளை ஒழிக்கவும், உள்ளடக்கிய சீர்திருத்தங்களைக் கொண்டுவரவும் இது வழிவகை செய்கிறது. ஒரு சடங்கு அத்தியாவசியமானதா என்பதை தீர்மானிப்பது கடினமானது. மத நடைமுறைகளை சோதனையிட்டே பார்க்க வேண்டும். வெளிப்படையான சட்ட விதிகளால் அவற்றை அளவிடுவது வரையறுக்கப்பட்ட ஒன்றாகவே இருக்க வேண்டும். ஏனெனில் ஒரு பக்தரின் உரிமையும், அந்த தெய்வத்தின் உரிமையும் பிரிக்க முடியாதவை’ என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பதற்கு எதிரான பிரிவின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், ‘‘இந்து மதத்தில் போப் போன்ற ஒற்றை தலைமை அமைப்பு இல்லை. ஆனால், ஒரு குறிப்பிட்ட கோயிலுக்குச் செல்லும் எவரும் அவர் கிறித்தவராகவோ, இஸ்லாமியராகவோ இருந்தாலும் அந்தத் தெய்வத்தின் மீதும், அந்த ஆலயத்தின் சம்ப்ரதாயத்தின் மீதும் நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். சபரிமலையில் 40 நாள் விரதம் என்பது அத்தகைய ஒரு சம்பிரதாயம். பிரிவு 26(பி)யின் கீழ் ஒரு மதப்பிரிவு தனது சமய விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமையானது, பிரிவு 25(2)(பி)-ன் கீழ் வரும் சமூக சீர்திருத்தச் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டது அல்ல. பிரிவு 25 என்பது தனிநபர் சார்ந்தது, பிரிவு 26 என்பது நிறுவனம் சார்ந்தது.

ஒரு கோயிலின் சம்பிரதாயத்தை மாற்ற யாருக்கும் உரிமை இல்லை. அதை ஏற்காதவர்கள் அந்த இடத்தைத் தவிர்க்கலாமே தவிர, நம்பிக்கையை மாற்றக் கோர முடியாது. ஒரு நடைமுறை சமயச சார்புடையதா அல்லது மதச்சார்பற்றதா என்று வேண்டுமானால் நீதிமன்றம் ஆய்வு செய்யலாம். ஆனால், அது அந்த மதத்திற்கு அத்தியாவசியமானதா என்பதைத் தீர்மானிக்க நீதிமன்றங்களுக்கு உரிய அதிகாரங்கள் இல்லை’ என்று தெரிவித்தார்.இதையடுத்து அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி சூர்யகாந்த், ‘‘குருவாயூர் கோயிலில் சட்டை அணியாமல் செல்வதும், பொற்கோயிலின் உள்ளே தலையை மூடிச் செல்வதும் அந்தந்த இடத்தின் மேலாண்மை மற்றும் நடைமுறை சார்ந்த விவகாரங்கள் ஆகும். இதில் பிரிவு 25 என்பது சமய நடைமுறை பற்றிப் பேசுகிறது. அதேப்போல் பிரிவு 26 சமய விவகாரங்கள்’ பற்றிப் பேசுகிறது. இவை இரண்டும் வெவ்வேறு தளங்கள்’’ என குறிப்பிட்ட அவர், வழக்கின் விசாரணையை வரும் 14ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Related Stories: