புதுடெல்லி: ஐடிஎப்சி வங்கி அரியானா அரசு கணக்குகளில் இருந்து ரூ.590 கோடி மோசடி செய்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அரியானா மாநில அரசின் பல்வேறு துறைகளின் நிதிகள் சண்டிகரில் உள்ள ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கி கிளையில் எப்டியில் டெபாசிட் செய்வதற்காக ரூ.590 கோடி செலுத்தப்பட்டது. ஆனால் இந்த பணம் அனைத்தும் பல்வேறு வகைகளில் மோசடியாக திருப்பி விடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. வங்கி ஊழியர்கள் மற்றும் வௌிநபர்களின் கூட்டு சதியால் போலி காசோலைகளை பயன்படுத்தி, போலியான நிறுவனங்கள் மூலம் பணம் வெவ்வேறு கணக்குகளுக்கு மாற்றப்பட்டிருப்பது தெரிய வந்தது.
மோசடி விவகாரம் கடந்த பிப்ரவரி மாதம் வௌியாகி வங்கியின் பங்குகள் சரிவை சந்தித்தன. இந்த மோசடி தொடர்பாக 4 ஏற்கனவே, 6 வங்கி ஊழியர்கள், 4 வௌி நபர்கள் மற்றும் ஒரு அரசு அதிகாரி உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 4 ஊழியர்களை வங்கி சஸ்பென்ட் செய்துள்ளது. வங்கி மோசடி குறித்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க அரியானா அரசு கடந்த மாதம் முடிவு செய்தது. இதையடுத்து அரியானா மாநில விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு பணியகம் பதிவு செய்த எஃப்ஐஆரின் அடிப்படையில் விரைவில் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உள்ளது.
