கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து 91 லட்சம் பெயர்கள் நீக்க பா.ஜதான் காரணம் என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தின் வடக்கு பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள மினாகான் பகுதியில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் மம்தா பானர்ஜி, ‘வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 91 லட்சம் பெயர்களும் மீண்டும் சேர்க்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் நீதிமன்றத்தை அணுகும். மேற்கு வங்கத்தில் ஆட்சியைப்பிடிப்பதற்காக பா.ஜவால் 91லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் பெயர்களை நீக்கியுள்ளார்கள்.
ஆனால் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம். பாஜ ஆளும் மாநிலங்களில் மக்கள் வங்காள மொழியில் பேசுவதற்காகவே சித்ரவதை செய்யப்படுகிறார்கள். பாஜ வங்காள மொழியை ஒரு வெளிநாட்டு மொழி என்று முத்திரை குத்துவதுடன் வங்காளம் பேசும் மக்களை ஊடுருவல்காரர்கள் என்றும் சித்தரிக்கிறது. இந்தத் தேர்தல் மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும், வங்காளத்தின் இருப்புக்காகவும் நடைபெறும் ஒரு போராட்டம். 2026 ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு பாஜகவின் வீழ்ச்சி தவிர்க்க முடியாததாகிவிடும்’ என்றார்.
* திட்டமிட்ட செயல்: மார்க்சிஸ்ட் கண்டனம்
மேற்குவங்கத்தில் 91 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுசெயலாளர் எம்.ஏ.பேபி தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு ஒரு அவசர கடிதத்தை எழுதி உள்ளார்.அதில்,’ மேற்குவங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் 91 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். நீக்கப்பட்ட வாக்காளர்கள் சந்தேக நபர்களாக கருதப்படுகின்றனர். மேலும் அவர்கள் தாங்கள் மேற்குவங்கத்தை சேர்ந்தவர்கள் என்ற உண்மையை நிரூபிக்க வேண்டிய சுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது பெரும் வேதனையை தருகிறது. இது திட்டமிட்டு, வாக்காளர்களை நீக்கும் செயல். சமத்துவத்துக்கு எதிரானது. இதில் தேர்தல் ஆணையம் உடனே தலையிட்டு இந்த நடவடிக்கையை தடுக்க வேண்டும். நீக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை ஆய்வு செய்ய வேண்டும்’ என்று தெரிவித்து உள்ளார்.
