ஈரான் போருக்கு மத்தியில் 15,400 டன் எல்பிஜியுடன் கப்பல் மும்பை வருகை

தானே: மேற்கு ஆசிய நாடுகளில் நிலவும் மோதலுக்கு மத்தியில் ஹார்முஸ் நீரிணையை வெற்றிகரமாக கடந்து 15,400 டன் எல்பிஜி உடன் இந்திய கப்பல் நவிமும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகத்திற்கு வந்தடைந்தது.
ஈரான் போர் காரணமாக, ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டது. அவ்வழியாக செல்லும் கப்பல்களுக்கு ஈரான் கட்டுப்பாடு விதித்தது. இதனால் கச்சா எண்ணெய் ஏற்றி வரும் கப்பல்கள், ஜலசந்தியை கடக்க முடியாமல் காத்துக் கிடக்​கின்றன. எரிபொருள் விநியோகமும் தடைபட்டது. பின்னர் இந்தியா ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்திய அடுத்து ஒரு சில இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதி வழங்கப்பட்டது.

அந்த வகையில் 15,400 டன் திரவ பெட்ரோலிய வாயு (எல்பிஜி) ஏற்றி வந்த ‘கிரீன் ஆஷா’ கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்டு, அந்த கப்பல் ஜலசந்தியை கடந்து வெற்றிகரமாக நேற்று நவிமும்பையை வந்தடைந்துள்ளது. இந்திய கொடி ஏற்றப்பட்டிருந்த அந்த கப்பலை அதிகாரிகள் வரவேற்றனர். நவிமும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் அந்த கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. போர் தொடங்கியதில் இருந்து இந்த துறைமுகத்திற்கு வந்த முதல் கப்பல் இது என்பதால், முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

‘கப்பலில் உள்ள சரக்கு மற்றும் பணியாளர்கள் என அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். நாட்டிற்கு தேவையான அத்தியாவசிய எல்பிஜி விநியோகத்தை தடையின்றி மேற்கொள்ள முடியும்’ என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நவிமும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகம், கண்டெய்னர்கள் மற்றும் எரிவாயு சரக்குகளை கையாளும் இந்தியாவின் முக்கியத் துறைமுகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. நாட்டின் எரிசக்தி விநியோகத்தில் இந்த துறைமுகம் முக்கியப் பங்காற்றுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: