புதுடெல்லி: மேற்குவங்கத்தில் நீதிபதிகள் சிறைபிடிக்கப்பட்ட விவகாரத்தில் 12 வழக்குகளை என்ஐஏ பதிவு செய்துள்ளது. மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்கள் நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பான சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியில் 7 நீதிபதிகள் ஈடுபட்டிருந்தனர். நீதிபதிகள் பணியில் இருந்த போது ஏராளமான போராட்டக்காரர்கள் அவர்களை முற்றுகையிட்டனர். நள்ளிரவு வரை அவர்களை மீட்க முடியவில்லை. 9 மணி நேரத்துக்கு பின் பாதுகாப்பு படையினர் நீதிபதிகளை பத்திரமாக மீட்டனர்.
நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிந்தது. இந்த சம்பவம் தொடர்பான விவகாரத்தை கண்டித்த உச்சநீதிமன்றம் இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. மால்டாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்காக நியமிக்கப்பட்ட நீதிபதிகளின் பாதுகாப்பு மற்றும் அது தொடர்பான சட்டம்-ஒழுங்கு சம்பவங்கள் குறித்த உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க, மால்டா மாவட்டத்தைச் சேர்ந்த மோதபாரி காவல் நிலையத்தின் 7 முதல் தகவல் அறிக்கைகள் மற்றும் காலிச்சக் காவல் நிலையத்தின் 5 முதல் தகவல் அறிக்கைகள் விசாரணைக்காக மீண்டும் பதிவு செய்யப்பட்டுள்ளன” என்று தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.
