தோல்வி பயத்தில் தரம் தாழ்ந்து பேசும் எடப்பாடி பழனிசாமி – முத்தரசன் கண்டனம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்த எடப்பாடி பழனிசாமியின் தரம் தாழ்ந்த பேச்சுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முத்தரசன் கண்டனம் தெரிவித்து உள்ளார். தேர்தல் பிரச்சாரங்களில் அரசியல் சார்ந்த விவாதங்களை நடத்தாமல் தரம் தாழ்ந்து பேசுவது ஏற்புடையதா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பிரச்சாரங்களின் போது தொடர்ந்து தரம் தாழ்ந்து பேசி வருகிறார். இவர் ஒரு கட்சியினுடைய பொதுச்செயலாராகவும் இருக்கிறார். ஏற்கனவே முதலமைச்சராக இருந்தவர், இப்படிப்பட்டவர் அரசியல் சார்ந்த தனது எதிர் கருத்துக்களை முன்வைக்காமல் திமுக ஆட்சியின் போது கொரோனா வந்திருந்தால் தற்போதைய முதல்வர் அதில் போயிருப்பார் என்று பேசி இருப்பது ஏற்கத்தக்கது அல்ல.

நாங்களும் அதிமுக, பாஜக-வை விமர்சிக்கிறோம், ஆனால் எங்கள் கருத்துக்கள் அரசியல் ரீதியிலான விமர்சனமாகவே இருக்கும். யாரையும் தரம் தாழ்ந்த முறையில் எங்கள் அரசியல் மேடைகளில் பேசியது கிடையாது. ஆனால் பழனிசாமியோ தொடர்ந்து தரம் தாழ்ந்த முறையில் பேசுகிறார். திமுக ஆட்சியில் கொரோனா வந்திருந்தால் முதலமைச்சர் ஸ்டாலின் கொரானாவிலேயே போயிருப்பார் என தனிப்பட்ட முறையில் தாக்கி பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

ஒரு அரசியல் தலைவர் இன்னொரு தலைவரை பார்த்து மரணித்திருப்பார் என்று சொல்வது எந்த வகை நாகரீகம் என்று தெரியவில்லை. தேர்தலில் தோற்கப்போவது உறுதி என்று தெரிந்த காரணத்தினால் ஆத்திரத்தில் சாக வேண்டும் என்று சாபமிடுகின்ற மிக மோசமான நிலைக்கு பழனிசாமி சென்றிருக்கிறார். பாஜக வலையில் சிக்கி கொண்டுள்ளார், அதிலிருந்து தப்பிக்க முடியவில்லை . அதன் காரணமாகவே இப்படியெல்லாம் ஆவேசப்பட்டு பேசுகிறார். தமிழக மக்கள் நடப்பவற்றை எல்லாம் பார்த்து கொண்டு தான் இருக்கிறர்கள், நிச்சயம் நல்ல தீர்ப்பை வழங்குவார்கள் என்று பேசியுள்ளார்.

Related Stories: