சென்னை: திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை ஆதரித்து, கொளத்தூரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: நான் 10 நாட்களாக தமிழகத்தில் மக்களை சந்தித்து பேசி வருகிறேன். நியாயமாக பார்த்தால் நான் இங்கு வந்திருக்க கூடாது. தந்தைக்காக மகன் வரவில்லை என யாரும் பேசிடக்கூடாது என்பதற்காக இங்கு வந்துள்ளேன். இந்தியாவிலேயே நம்பர் ஒன் தொகுதி இந்த கொளத்தூர் தொகுதி. ஓட்டு மொத்த இந்தியாவும் திரும்பி பார்க்கும் தலைவர் நம் முதல்வர் தான். இந்திய தலைவர்கள் பலரும் ஸ்டாலினை நம்பர் ஒன் தலைவர் என பாராட்டுகின்றனர்.
இதற்கு காரணம் இந்த கொளத்தூர் தொகுதி தான். இந்த தொகுதி அமைந்த பின் 3 முறை நம் தலைவரை நீங்கள் தேர்வு செய்துள்ளீர்கள். கடந்த முறை 70,000 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தீர்கள். இந்த முறை 1 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். இந்த தேர்தல் டெல்லிக்கும் தமிழகத்திற்குமான போட்டி. இதில் தமிழகத்தை வெற்றி பெற வைக்க வேண்டும். டெல்லி அணியை ஓட ஓட விரட்ட வேண்டும். டெல்லி அணியில் மோடியும் அவரது நம்பர் ஒன் அடிமை பழனிசாமியும் உள்ளனர். 234 தொகுதியிலும் நாம் ஜெயிக்க வேண்டும்.
அதில் கொளத்தூர் நம்பர் ஒன் தொகுதியாக இருக்க வேண்டும். எதிர்த்து நிற்கும் வேட்பாளர் டெபாசிட் பறிபோக வேண்டும். கொளத்தூர் தொகுதியில் வாரத்திற்கு ஒரு முறை வரும் முதல்வர் பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி உள்ளார். சேகர்பாபு ஆண்டு முழுதுவம் இங்கு தான் உள்ளார். அந்த உரிமையோடு உங்களை சந்தித்து ஓட்டு கேட்கிறோம். மேயர் சிட்டி பாபு மேம்பாலம், கபாலீஸ்வரர் கல்லூரி, பேருந்து நிலையங்கள் கட்டி தரப்பட்டுள்ளது.
டயாலிசிஸ் சென்டர், முதல்வர் படைப்பகம், நவீன பள்ளிகள், திருமண மாளிகை, அங்கன்வாடி மையங்கள் என ஏகப்பட்ட திட்டங்கள் இங்கு துவக்கப்பட்டுள்ளன. 1,200 புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து திட்டம், மகளிர் விடியல் திட்டம், இந்த ஐந்தாண்டில் மாதம்தோறும் 1,000 ரூபாய் வரை மகளிர் சேமித்துள்ளனர். காலை உணவுத்திட்டம், கல்வி ஊக்கத்தொகை, 3.5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, 10 லட்சம் கல்லூரி மாணவர்களுகு்கு லேப்டாப் வழங்கியுள்ளோம். மகளிர் உரிமை தொகை திட்டத்தை நிறுத்த எதிரணியினர் திட்டமிட்டனர். ஆனால் நம் தலைவர் முன்னதாகவே சிறப்பு நிதியுடன் சேர்த்து 1.31 கோடி பேருக்கு தலா 5,000 ரூபாய் வழங்கினார்.
தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைந்ததும் மகளிருக்கு 2,000 ரூபாய் தர உள்ளோம். முதியோர் உதவித்தொகை 2,000; கல்வி உதவித்தொகை 1,500; 10 லட்சம் பேருக்கு கனவு இல்லம் கட்டித் தரப்படும். மகளிருக்கு ரூ.8,000 மதிப்புள்ள கூப்பன் தருகிறோம். அதை வைத்து எதை வேண்டுமானாலும் மகளிர் விருப்பதிற்கேற்ப வாங்கிக் கொள்ளலாம்.நாம் இவ்வளவு திட்டங்கள் செய்துள்ளதால் தான் தமிழகம் வளர்ச்சி அடைந்த மாநிலமாக முதலிடத்தில் உள்ளது. ஒன்றிய அரசு தொடர்ந்து தமிழகத்தை புறக்கணிக்கிறது. நாமும் பாஜவை புறக்கணிக்க வேண்டும்.
அதற்கான தேதி தான் ஏப்ரல் 23. இன்னும் 15 நாள் உள்ளது. நீங்கள் அத்தனை பேரும், உதயசூரியன் சின்னத்தில் ஓட்டு போடுவதென முடிவு எடுத்து விட்டீர்கள் தானே. தமிழக முதல்வரை கொளத்தூரில், 1 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். தலைவரின் மகனாக இருந்து உங்கள் வீட்டு பிள்ளையாக, கருணாநிதியின் பேரனாக இருந்து கேட்கிறேன். உதயசூரியன் சின்னத்தில் ஓட்டு போட்டு, முதல்வரை மிகப்பெரிய வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். இந்த பிரசாரத்தை பலரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும்.
