தேசிய நெடுஞ்சாலையில் பின்தொடர்ந்து அட்டகாசம்; விஜய் கூட்டத்தில் மீண்டும்… மீண்டும்… விபத்து: பலர் காயம், மயக்கம்

* எதிர் திசையில் அதிவேகமாக சென்று வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல்

* கைக்குழந்தைகளுடன் நடுரோட்டில் தவித்த கணவன்கள்: போலீசுடன் வாக்குவாதம், தள்ளுமுள்ளு

தூத்துக்குடி: தவெக தலைவர் நடிகர் விஜய், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பிரசாரத்திற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று பகல் 11.50 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையம் வந்தார். அவரை வரவேற்க விமான நிலையத்தில் நிர்வாகிகள், தொண்டர்கள் அனுமதிக்கப்படவில்லை. விஜய் வாகனம் விமான நிலையத்தில் இருந்து வெளியே வருவதை பார்த்ததும், போலீசார் அமைத்திருந்த தடுப்புகள் மற்றும் காம்பவுண்ட் சுவரில் தாண்டி ஏறி குதித்து ரசிகர்கள் ஓடினர். அப்போது சில இளம்பெண்கள் தடுமாறி கீழே விழுந்தனர். அவர்களை போலீசார் துரிதமாக மீட்டனர்.

விஜய்யை காண குழந்தைகள், சிறார்களை அழைத்து வர வேண்டாம் என எச்சரித்திருந்தும், பலர் குழந்தைகள், சிறார்களை அழைத்து வந்து தவெக கொடியுடன் காரின் மேல் கொளுத்தும் வெயிலில் அமர வைத்திருந்தனர்.
பின்னர், விஜய் வாகனத்தை பின்தொடர்ந்த ரசிகர்கள் வாகனங்களில் போட்டி போட்டு சென்றனர். வாகைக்குளம் டோல்கேட் பகுதியில் விஜய் வாகனத்தை பின்தொடர்ந்து வேகமாக சென்ற பைக்குகள் ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்து மோதியது. இதில் பலர் கீழே விழுந்தனர். 9 பேர் காயமடைந்தனர்.

கூட்ட நெரிசலில் சிக்கி 16 பேர் காயமடைந்தனர். பலர் மயக்கமடைந்தனர். இதையடுத்து பைக்கில் பின் தொடரக்கூடாது என போலீசார் தடுத்தனர். ஆனால் அவர்களிடம் வாலிபர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போலீசார், அவர்கள் வந்த பைக்குகளின் சாவிகளை பறிமுதல் செய்தனர். அதே நேரத்தில் தூத்துக்குடி மற்றும் விமான நிலைய வளாகத்தில் இருந்த கட்சி நிர்வாகிகள், தங்களது கார்கள் மற்றும் பைக்குகளில் தேசிய நெடுஞ்சாலையில் எதிர்திசையில் விஜய் வாகனத்துக்கு போட்டியாக அதிவேகமாக சென்றனர்.

இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். பாளை கேடிசி நகரில் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்க விஜய் வாகனம் மீது அல்வா பொட்டலங்களையும் ரசிகர்கள் வீசினர். மதியம் சுமார் 1 மணியளவில் கேடிசி நகருக்கு வந்த விஜய் அங்கு சிறிது நேரத்தில் தனது பிரசாரத்தை முடித்துக்கொண்டு நான்கு வழிச்சாலை வழியாக தாழையூத்து சென்றார். அப்போது, விஜய் வாகனத்தை பின்தொடர்ந்து வந்த பைக் தொண்டர்களை கயிறுகளை வைத்து போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் தாழையூத்து, தச்சநல்லூர் பகுதியில் விபத்து சம்பவங்கள் நடக்கவில்லை.

போலீஸ் மற்றும் கட்சி தலைமையை மீறி விஜய்யை காண ஏராளமான பெண்கள் கைக்குழந்தைகளுடன் படையெடுத்தனர். ஆனால், பாதுகாப்பு கருதி குழந்தைகளை போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை. உடனே அந்த பெண்கள் சற்றும் யோசிக்காமல், குழந்தைகளை கணவன்மார்கள் கையில் திணித்துவிட்டு விஜய்யை பார்க்க ஓட்டம் பிடித்தனர். பாவம் கணவன்கள் குழந்தைகளை வைத்துக்கொண்டு பரிதவித்தனர். அதேபோல, பள்ளி சீருடையில் வந்த சிறுவர்களை போலீசார் திருப்பி அனுப்பியதால், அவர்கள் உஷாராகி கலர் சட்டையை மாற்றிக்கொண்டு மீண்டும் வந்தனர்.

ஆனால், போலீசார் உங்களை விட நாங்கள் உஷார் என கூறி, அவர்களது தந்திரத்தை முறியடித்து மீண்டும் திருப்பி அனுப்பிய சம்பவம் அனைவரையும் சிரிக்க வைத்தது. தவெக தலைவர் விஜய் வாகனத்தை துரத்திக் கொண்டு அக்கட்சியினர் பைக்கில் வேகமாக வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் விஜய் வாகனத்தை பின்தொடர்ந்து வந்த வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கினர். ஆனால் நெல்லை மாவட்டத்தில் போலீசார் சிறப்பாக செயல்பட்டு விபத்துக்களை தடுத்தனர்.

குறிப்பாக மாவட்ட எல்லையில் விஜய் வாகனம் வரும் வரை காத்திருந்த போலீசார் அவரது வாகனம் சென்ற உடன் சாலையில் கயிறால் தடுப்பு ஏற்படுத்தினர். இதுபோல் தாழையூத்து பகுதியிலும் போலீசார் கயிறு கட்டி வாகன ஓட்டிகளை தடுத்தனர். இதனால் பைக்கில் பின்தொடர்ந்தவர்கள் தடுமாறி நின்றனர். நெல்லை வண்ணார்பேட்டையில் விஜய் ரோடு ஷோவால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் நெல்லை சந்திப்பு பஸ்நிலையம், புதிய பஸ்நிலையத்துக்கு செல்ல முடியாமல் பயணிகள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பரிதவித்தனர்.

நெல்லையில் பிரசாரத்தை முடித்துக் கொண்ட தவெக தலைவர் விஜய், நேற்று மாலை தூத்துக்குடி வந்தார். 3வது மைல் பகுதிக்கு மாலை 5 மணிக்கு வந்த அவர், பாளை ரோட்டில் துவங்கி விவிடி சிக்னல் வரை ரோடு ஷோ நடத்தினார். திறந்த வாகனத்தில் நின்றவாறே ரசிகர்களை பார்த்து கையசைத்தபடி விவிடி சிக்னல் பகுதியில் விஜய் பேசுவதற்காக 15 நிமிடம் வழங்கப்பட்டிருந்தது. இதற்காக அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் அவர் அங்கு பேசாமல் கைகளை மட்டும் காண்பித்து விட்டு சென்றார்.

அவர் விவிடி சிக்னல் பகுதியில் வந்ததும் போலீசார் அமைத்திருந்த பேரிகார்டுகளை தாண்டிக் குதித்து வாலிபர்கள் விஜய் வாகனத்தை நோக்கி பாய்ந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் போலீசாரை தள்ளிவிட்டவாறே முண்டியடித்தனர். இதனால் போலீசாருக்கும், விஜய் ரசிகர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த் ரோடுஷோவுக்கு சிறுவர்கள், குழந்தைகள், பள்ளி மாணவர்களும் சிலர் யூனிபார்மிலேயே அழைத்து வரப்பட்டிருந்தனர்.

ஒரு இளைஞர் தனது 3 மாத கைக்குழந்தையை கூட்டத்திற்குள் கொண்டு வந்ததுடன் தனது தலைக்கு மேல் உயர்த்தி பிடித்தவண்ணம் ஆடிப்பாடிக் கொண்டிருந்தார். மேலும் , சிலர் தங்களது குழந்தைகளுக்கு தவெக கொடி, விசிலையும் கொடுத்து அழைத்து வந்திருந்தனர். அவர்களை கையசைத்தபடி சென்ற விஜய், 25 நிமிடத்தில் ரோடுஷோவை முடித்துவிட்டு புறப்பட்டு சென்றுவிட்டார்.

* விபத்தை தவிர்க்க ஹெலிகாப்டரில் போலாமே…
விஜய் ஒவ்வொரு முறையும் பிரசாரத்துக்கு வரும்போது ரசிகர்களை பின்தொடர வைத்து ரசித்து விபத்தில் சிக்க வைக்கிறார். இதனால், விஜய்யை பார்க்க ஆர்வத்தில் செல்லும் சாதாரண குடும்ப பின்னணி கொண்ட பிள்ளைகள் விபத்தில் சிக்கி காயமடைவதும், உயிரிழப்பதும் தொடர் கதையாகி வருகிறது. இது, அந்தந்த குடும்பங்களை கடுமையாக பாதிக்கிறது. இவ்வாறு பாதிக்கும் குடும்பங்களையும் தவெகவினர் நேரில் சென்று ஆறுதல் கூறவில்லை. தொடர் விபத்துகளை தடுக்காமல், இதை விஜய் அதிகரித்து கொண்டே இருக்கிறார்.

தனி விமானத்தில் பறக்கும் விஜய், விபத்தை தவிர்க்க ஹெலிகாப்டரில் பிரசாரம் இடத்துக்கு செல்லலாம். ஆனால், விமான நிலையத்தில் இருந்து பிரசாரம் செய்யும் இடத்துக்கு சாலையிலேயே நெடும் தூரம் விஜய் பயணிக்கிறார். ரசிகர்கள் மீது அக்கறை இருந்தால், விஜய் இதை செய்து இருப்பார். ஆனால், ரசிகர்கள் பின்தொடர்வதை அவர் ரசிப்பதால், இவ்வாறு செய்வதாக பாதிக்கப்பட்ட ரசிகர்களின் பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர்.

* வேட்பாளர்கள் பெயரையே கூறாத விஜய்
தவெக சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் நேற்று பாளை கேடிசி நகர் மைதானத்தில் நடந்தது. இதில் நெல்லை, தென்காசி வேட்பாளர்களை ஆதரித்து விஜய் பேசினார். இக்கூட்டத்தில் பேசிய விஜய், தொகுதி மற்றும் வேட்பாளர்களின் பெயர்களை எந்தவொரு இடத்திலும் குறிப்பிடவே இல்லை.

234 தொகுதிகளிலும் விஜய் தேர்தலில் நிற்பதாக நினைத்து கொண்டு விசில் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்றே குறிப்பிட்டார். இதேபோல், தூத்துக்குடியில் ரோடுஷோ சென்ற விஜய்க்கு பேச அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதற்காக வேட்பாளர்கள் வந்திருந்தனர். ஆனால் அவர்களை நிறுத்துவதற்கு ஒரு மேடை கூட அமைக்கப்படவில்லை. அவர்களை விஜய் அறிமுகப்படுத்தக்கூட இல்லாமல் வந்த வேகத்தில் விஜய் சென்று விட்டார்.

* அஜிதா புறக்கணிப்பு
வழக்கமாக விஜய் கட்சி என்றாலே தூத்துக்குடியில் அனைவருக்கும் நினைவுக்கு வருவது அஜிதா ஆக்னல் தான். அஜிதா ஆக்னல் பதவி வழங்குவதிலும் புறக்கணிக்கப்பட்டு, வேட்பாளர் அறிவிப்பிலும் புறக்கணிக்கப்பட்டார். நேற்று விமான நிலையத்திற்கும் சரி, ரோடு ஷோவிற்கும் சரி வேட்பாளர்களுடன் மாவட்ட நிர்வாகி எஸ்டிஆர் சாமுவேல்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால் தவெக பிரபலம் அஜிதா ஆக்னல் வரவேற்பு உள்ளிட்ட எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை.

Related Stories: