ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அதிமுகவின் மாஜி அமைச்சர்கள், மாஜி எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டவர்களில் பெரும்பாலானோர், சசிகலாவால் நியமிக்கப்பட்டவர்கள். ஜெயலலிதா மறைவுக்கு பின், சசிகலாவின் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். ஆனால், பதவிக்கு வந்ததும், ஏற்றிவிட்ட ஏணிப்படியான சசிலாவையே கழற்றி விட்டார். எதிர்காலத்தில் இவர்களால் கட்சிக்குள் பிரச்னை வர வாய்ப்புள்ளது என நினைத்து டிடிவி.தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டவர்களையும் கட்சியை விட்டு வெளியேற்றினார். சிலரை வலுக்கட்டமாக வெளியேற வைத்தார். இதன்பிறகு ஒட்டுமொத்த அதிமுகவும் தனது கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாக நினைத்துக் கொண்டுள்ள எடப்பாடியால் சசிகலா தனித்து விடப்பட்டுள்ளார்.
இருப்பினும், அதிமுக தேர்தல்களில் தொடர் தோல்வி அடைந்து வருகிறது. இதை சரிக்கட்ட பிரிந்திருப்பவர்களை கட்சியில் ஒன்றிணைக்க வேண்டும். மீண்டும் அதிமுக பழைய பலம் பெற்று வலிமையடைய வேண்டுமென முயற்சித்தார். இதற்காக டிடிவி.தினகரன், தனிக்கட்சி துவங்கியதால் ஏற்பட்ட மனக்கசப்பை மறந்து அவரை சந்தித்தார். செங்கோட்டையனையும் சந்தித்து பேசினார். ஆனால், எடப்பாடி எந்த சமாதானத்தையும் ஏற்கவில்லை. அதேநேரம் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேஜ கூட்டணியில் டிடிவி இணைந்ததையும் சசிகலா விரும்பவில்லை.
எடப்பாடி பழனிசாமியின் துரோகத்தில் மிகுந்த வேதனையடைந்த சசிகலா, ஏற்கனவே துவங்கப்பட்ட அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தூசி தட்டி தேர்தலை சந்திப்பதாக அறிவித்தார். இதன்படி, தென்மண்டலம், கொங்கு மண்டலம், மற்றும் மத்திய மண்டல பகுதிகளில் பல்வேறு தொகுதிகளில் தனது கட்சியின் சார்பில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். இதிலும் குறிப்பாக மாஜி அதிமுகவினர் மற்றும் சிட்டிங் அதிமுக எம்எல்ஏக்களை குறிவைத்து வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். தற்போதைய தேர்தலில் சீட் கிடைக்காத பல அதிமுக மாஜி எம்எல்ஏக்களான உசிலம்பட்டி அய்யப்பன், திண்டுக்கல் ராமுத்தேவர் உட்பட பலரை களமிறக்கி உள்ளார். இதனால் முக்குலத்தோர் ஓட்டுகளில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் அதிமுகவுக்கு செல்லாமல் பிரிய வாய்ப்பிருக்கிறது என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
தனது ஆதரவாளர்களின் வாக்கு எந்தவகையிலும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு போய்விடக் கூடாது என்பதை மனதில் வைத்து தனது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். மேலும் தனது கட்சி போட்டியிடாத இடங்களில் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் எந்த வகையிலும் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதற்காகவும், தன்னால் ஏற்பட்ட தோல்வியை எடப்பாடி பழனிசாமி வாழ்நாளில் எப்போதும் மறந்து விடக்கூடாது என்பதை உணர்த்த வேண்டும் என்ற அடிப்படையிலும் தனது கட்சியினருக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளார். இதையடுத்தே சசிகலாவின் ஆதரவாளர்கள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். எங்களது தோல்வி உறுதியென்றாலும், அதிமுக எந்த வகையிலும் வெற்றி பெற்று விடக்கூடாது. இந்த தேர்தல் எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுகவினருக்கும் பாடம் புகட்டும் என சவால் விடுத்து வருகின்றனர் சசிகலா கட்சியினர்.
* சிங்கத்துக்கே தடவி குடுத்துட்டு போவேன் நான் எதற்கும் பயப்பட மாட்டேன்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அகில இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பாலமுருகனை ஆதரித்து, நேற்று முன்தினம் இரவு அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: ஜெயலலிதா மறைவுக்குப் பின், நான் சிறை செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றியாக வேண்டும் என்பதற்காக, யாரை நம்பி நான் பொறுப்பை ஒப்படைத்துச் சென்றேனோ அவர்கள் நான் சிறைக்குச் சென்ற மூன்றாவது மாதத்திலேயே என்னை கட்சியிலிருந்து நீக்கினர்.
நான்காண்டு சிறைவாசம் முடிந்து நான் வெளியே வந்த போது, கட்சிக்கொடியை பயன்படுத்தக் கூடாது என கட்டளையிட்டனர். தமிழக எல்லையான ஓசூர் தாண்டி கட்சிக்கொடியுடன் நான் வந்தால் என்னை கைது செய்யவும் போலீசாருக்கு அறிவுறுத்தினர். சிறையிலிருந்து வந்தவுடன் ஜெயலலிதாவின் ஆன்மாவிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக அவரது மணிமண்டபம் செல்ல முற்பட்டபோது, திறந்த இரண்டு நாளேயான அதனை பூட்டிவிட்டு பராமரிப்பு பணிகள் நடைபெறுவதாக கூறி எனக்கு அனுமதி மறுத்தனர். இதையெல்லாம் நான் பொறுத்துக் கொண்டது, இந்த கட்சி தொண்டர்களையும், மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக மட்டுமே. நான் எதற்கும் பயப்பட மாட்டேன். சிங்கத்த பார்த்தா கூட நான் பயப்பட மாட்டேன், தடவி குடுத்துட்டு போவேன். இவ்வாறு அவர் பேசினார்.
