நானும்,இபிஎஸ்சும்தான் அதிமுகவை மீட்டோம்: என் வாயை கண்ட்ரோல் பண்ண முடியல; சி.வி.சண்முகம் அலப்பறை

விழுப்புரம் தொகுதி அதிமுக வேட்பாளர் விஜயாவை ஆதரித்து நடந்த பிரசார கூட்டத்தில் சி.வி.சண்முகம் எம்.பி. பேசியதாவது: கடந்த தேர்தலில் நான் இந்த தொகுதியில் போட்டியிடும்போது எனக்கு எப்படி தேர்தல் வேலை (உள்ளடி) பார்த்தீர்கள் என்பது எனக்கு தெரியும். இந்த தேர்தலில் அப்படி இருக்கக்கூடாது. கட்சிக்கு உழைத்தவர்களை என்றும் கைவிட மாட்டோம். என்னை ஜெயலலிதா 2 முறை அமைச்சர், மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து நீக்கிய போதும் அடுத்த தேர்தலில் என்னை அழைத்துதான் சீட்டு கொடுத்தார். அன்று அவசரப்பட்டு நான் பேசியிருந்தால் ஒருநாள் தலைப்பு செய்தியாக மட்டுமே வந்திருப்பேன்.

பொறுமையாக இருந்ததால் தற்போது இங்கு நிற்கிறேன். அதிமுகவின் தேர்தல் அறிக்கை மக்களிடையே சென்றடையவில்லை. பல வாக்குறுதிகளை இபிஎஸ் கொடுத்திருக்கிறார். நாம் 10 ஆயிரம் ரொக்கப்பணத்தை கையில் கொடுப்போம் என்று சொல்லியிருக்கிறோம். இதனை மக்கள் வாங்கிக்கொண்டு அப்படியே பாதயாத்திரையாக திருப்பதிக்கு சென்று உண்டியலில் போட்டு வேண்டுதலை நிறைவேற்றி மன நிம்மதி பெறலாம். அதிமுகவுக்கு பலசோதனை காலம் வந்தபோதும் தொண்டர்களின் கட்டுக்கோப்பால் வலிமையாக உள்ளது.

அதிமுகவுக்கு எதிராக வழக்கு போட்டவர்களெல்லாம் இன்று வெளியே சென்று விட்டார்கள். நீதிமன்றத்தில் உள்ள வழக்கும் நாளை ஒன்றுமில்லாமல் போய்விடும். அதிமுகவை மீட்டதற்கு இபிஎஸ்சும், நீதிமன்றத்துக்கு சென்ற நானும் தான் காரணம். (ஒரு ப்ளோவில் சி.வி.சண்முகம் ஒரு கட்சி தலைவரை பற்றி பேச முற்பட்டபோது திடீரென்று அவரே பேச்சை நிறுத்தி) என் வாயை கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த சாப்டர் வேண்டாம் என்று அடுத்த சப்ஜெக்டுக்கு சென்று பேசினார்.

* சி.வி.சண்முகம் பிரசாரத்தில் பெண்களுக்கு பணப்பட்டுவாடா
விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் போட்டியிடுகிறார். இவர் தேர்தல் அறிவிக்கும் முன்பே மயிலம் பகுதியில் போட்டியிடும் முணைப்பில் அவரது சகோதரர் ராதாகிருஷ்ணன் மூலம் பல்வேறு குடும்பங்களுக்கு மொத்தமாக பணம் வழங்கியதாக பரபரப்பு குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்நிலையில் நேற்று மயிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேல்மாவிலங்கை, கீழ்மாவிலங்கை மற்றும் கொடியம் உள்ளிட்ட கிராமங்களில் காலையிலிருந்து தொடர்ச்சியாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பரப்புரையில் கலந்து கொண்ட அந்த பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு அங்குள்ள அதிமுகவினர் 100 ரூபாய் பணம் கொடுக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக சி.வி.சண்முகம் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.

* தலைவரு, தல ரசிகர்களுக்கு எஸ்.பி. குறி
கோவை மாவட்டத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து வருகின்றது. அதிமுக எங்களது கோட்டை என அதிமுக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக கோட்டையில் ஓட்டை போடுவோம் என கூறி திமுக கூட்டணியினர் பிரசாரம் செய்கின்றனர். அதிமுக, திமுகவினர் முக்கிய பிரமுகர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக மேற்கு மண்டல பொறுப்பாளரான எஸ்.பி.வேலுமணி ரஜினி, அஜித் ரசிகர்களை குறி வைத்து அவர்களின் வாக்குகளை மொத்தமாக பெற முயற்சி செய்து வருகிறார். சமீபத்தில் ரஜினி ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்களை தனது சகோதரர் மூலம் சந்தித்து பேரம் பேசி எஸ்.பி. வேலுமணி, கடந்த 3 நாட்களுக்கு முன்பு நடிகர் அஜித் குமாரின் ரசிகர் மன்ற நிர்வாகிகளையும், ரசிகர்களையும் நேரடியாகச் சந்தித்து அவர்களுடன் நீண்டநேரம் கலந்துரையாடி இருக்கிறார்.

அப்போது, ஜெயலலிதா மீது உங்களின் தலைவர் அஜித் மிகப்பெரிய மரியாதை வைத்து இருக்கிறார். அடிக்கடி வந்து சந்தித்து செல்வார். அம்மா மறைந்த போது வெளிநாட்டில் இருந்தவர், திரும்ப வந்த பிறகு சமாதியில் சென்று மரியாதை செலுத்தினார். அவர் மீது எங்களுக்கும் மிகப்பெரிய மரியாதை இருக்கு. அதனால் நீங்கள் எல்லாம் அதிமுகவிற்கு ஆதரவு கொடுத்து உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டார். விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில், ரஜினி, அஜித் ரசிகர்களிடம் சீண்டி மோதல் போக்கில் ஈடுபட்டு வரும் நிலையில், அந்த நடிகர்களின் ரசிகர்கள் வாக்குகளை பெற அதிமுகவினர் அவர்களிடம் திடீர் பாசத்தை காட்டிவருகின்றனர்.

Related Stories: