சென்னை: பாஜ சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஊடக விவாதங்களில் பங்கேற்போர் பட்டியலில் ஊடக பிரபலங்களை புறக்கணித்திருப்பது பாஜவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வரும் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்து கட்சிகளும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்களில் நடைபெறும் விவாதங்கள் மற்றும் கலந்துரையாடல்களில் கட்சிகள் சார்பில் பங்கேற்கக்கூடியவர்கள் பட்டியலை ஒவ்வொரு கட்சிகளும் அறிவித்து வருகின்றன. தற்போது அனைத்து தொலைகாட்சிகளிலும், சமூக ஊடகங்களிலும் விவாதங்கள் மூலம் பல்வேறு அரசியல் கருத்துகள் வெளி வருகின்றன.
ஒரு கட்சியின் நிலைபாட்டை சொல்லும் போது அதற்கான விளக்கத்தை சரியாக அளிக்கக்கூடியவர்களை தேர்வு செய்து கட்சிகள் இந்த பட்டியலை வெளியிடுகின்றன. கட்சியின் அனுமதி இல்லாமல் இதுபோன்ற விவாதங்களில் பங்கேற்பதை கட்டுப்படுத்தும் வகையில் முக்கிய கட்சிகள் இதற்கான பெயர் பட்டியலை அறிவித்து வருகின்றன. அந்த வகையில், தமிழக பாஜவும் 14 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலை தமிழக பாஜ தலைவர் என்ற வகையில் நயினார் நாகேந்திரன் பெயரில் வெளியாகியுள்ளது.
அந்த பட்டியலுடன் பாஜ செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி பெயரில் ஒரு அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அதில், ‘தொலைக்காட்சி, யூடியூப் சேனல்களில் நடைபெறும் விவாதங்களில் பங்கேற்க இந்த 14 பேர் மட்டுமே அதிகாரபூர்வமாக அனுமதிக்கப்படுவார்கள்’ என்ற ஒரு டிவிஸ்ட்டை வைத்துள்ளார். அதற்கு காரணம், பாஜ சார்பில் ஏற்கனவே தொலைக்காட்சி விவாதங்களில் பிரபலமாக விளங்கக்கூடிய ஜோதிடர் ஷெல்வீ, அர்ஜூன மூர்த்தி, ஆசீர்வாதம் ஆச்சாரி போன்றவர்கள் உள்ளனர். பாஜவை எதிர்த்து சொல்லக்கூடிய கருத்துகளுக்கு சரியான பதிலடி கொடுக்கும் வகையில் விவாதங்களில் பங்கேற்று வருகின்றனர். ஆனால் தற்போது பாஜ தலைமை வெளியிட்டுள்ள 14 பேர் கொண்ட பட்டியலில் இவர்கள் பெயர் புறக்கணிக்கப்பட்டிருப்பது கட்சியில் ஏதோ உள்குத்து நடந்துள்ளதாக பாஜவினர் மத்தியில் பேசப்படுகிறது.
இதுகுறித்து பாஜ நிர்வாகிகள் சிலர் கூறுகையில்,‘‘ ஊடக விவாங்களில் பாஜ சார்பில் தற்போது இந்த 3 பேரும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். ஆனால் அவர்களை குறிவைத்து பட்டியலில் அவர்களை இடம்பெறாமல் செய்துள்ளனர். யார் யாருக்கோ வாய்ப்பு கொடுத்துள்ள கட்சி தலைமை இவர்களை மட்டும் புறக்கணிப்பதை பார்த்தால் ஏதோ பின்னனியில் சதி வேலை நடந்துள்ளதாகவே பார்க்கிறோம். குறிப்பாக இந்த பட்டியல் தயாரிப்பில் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதியின் பங்கு அதிகமாக உள்ளது. அவரது திருவிளையாடல் காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது’’ என்றனர். பாஜ சார்பில் ஏற்கனவே தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்ற ஜோதிடர் ஷெல்வீ, அர்ஜூன மூர்த்தி, ஆசீர்வாதம் ஆச்சாரி புறக்கணிக்கப்பட்டு உள்ளனர்.
