பாஜ தலைமையின் அவசர அழைப்பை ஏற்று நேற்று முன்தினம் மாலை டெல்லி சென்ற அண்ணாமலை, நேற்று மாலை கோவை திரும்பினார். கோவை விமான நிலையத்தில் அண்ணாமலை அளித்த பேட்டி: பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் முயற்சி அனைத்து கட்சிகளும் இணைந்து கொண்டு வந்த வரலாற்றுச்செயல். தமிழக எம்.பிக்களும் இதற்கு ஆதரவு அளிக்க வேண்டும். நடிகர்கள் அரசியலுக்கு வருவது புதிய விஷயம் அல்ல. பலர் அதில் வெற்றியும் பெற்றுள்ளனர்.
வாக்காளர்கள் தங்களின் முதல்வர் வேட்பாளர்கள் தினமும் களத்தில் இருக்க வேண்டும், மக்களை சந்திக்க வேண்டும், தினமும் தொகுதியில் பேச வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். தேர்தலுக்கு 6 மாதம் முன்பு வெளியில் வரவில்லை என்றால் ஓ.கே. ஆனால், இப்போது தேர்தல் நடந்து கொண்டிருக்கும் போது கூட சில பேரை காணவில்லை. அறிக்கையிலும், டிவிட்டரிலும் தான் இன்னமும் இருக்கின்றனர். இந்த தேர்தல் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, திமுக தலைமையிலான மதசார்ப்பற்ற கூட்டணிக்கு இடையில் தான் போட்டி. மற்றவர்களும் இருக்கின்றனர்.
சீமான் கடுமையான பிரசாரம் செய்து கருத்துகளை முன் வைக்கிறார். கருத்துகளை கூட வைக்காமல் சிலர் அரசியல் செய்கின்றனர். தப்போ, சரியோ பொதுஇடத்திற்கு வாங்க, தப்போ, சரியோ வெயிலுக்கு வாங்க. தப்போ, சரியோ மக்கள் மன்றத்தில் வையுங்க. தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்து இருக்கிறது. எல்லோரும் களத்திற்கு வர வேண்டும். அதனை தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர். இன்றே களத்தில் வரவில்லை என்றால், தேர்தலுக்கு பிறகு எப்படி களத்திற்கு வருவாங்க இவ்வாறு அவர் கூறினார். தவெக தலைவர் விஜய் சென்னையில் பிரசாரத்துக்கு அனுமதி பெற்று, தொடர்ந்து ரத்து செய்தார். தற்போது, முழு வீச்சில் பிரசாரம் செய்யாமல் சில நாட்கள் இடைவெளிவிட்டுதான் ஏதாவது ஒரு ஊருக்கு பிரசாரத்துக்கு செல்கிறார். இதைதான் அண்ணாமலை மறைமுகமாக தாக்கி விமர்சித்ததாக கூறப்படுகிறது.
* எடப்பாடி காலை வாரினாரா? பங்காளி சொல்லும் அடடே பதில்
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஞானசேகரனை ஆதரித்து நேற்று அமுமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார். முன்னதாக திருப்பத்தூரில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி, சசிகலாவின் காலில் ஆஸ்தானமாக விழுந்தும், உங்களது(டிடிவி தினகரன்) காலை வாரிவிட்டும் ஆட்சி பீடத்தில் அமர்ந்தார் என குற்றச்சாட்டு உள்ளதே என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த டிடிவி தினகரன், ‘பெரியவர்களிடம் ஆசி பெறுவது போன்று இதுவும் ஒன்றாகும். இதனை விமர்சிப்பது வேடிக்கையாக உள்ளது. எடப்பாடி பழனிசாமி எனது காலை வாரிவிட்டது எல்லாம் எதுவும் நடக்கவில்லை. எங்களுடைய பங்காளி சண்டை முடிவடைந்துவிட்டது. நாங்கள் என்டிஏ கூட்டணியில் ஒன்றிணைந்து செயல்படுகிறோம்’ என்றார்.
* பாஜ வேட்பாளரை ஒதுக்கிய அதிமுகவினர்
நாமக்கல் மாவட்டத்தின் ராசிபுரம் தொகுதியை குறிவைத்து மல்லுக்கட்டி நின்று தனது மகன் பிரேம்குமாருக்கு சீட் வாங்கி கொடுத்துள்ளார் பாஜவின் மாநில துணைத்தலைவரான மாஜி துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி. பாஜ தனித்து நின்றால் தம்பிடிக்கு தேறாது. அதேநேரத்தில் அதிமுக கூட்டணியில் இருப்பதால் எப்படியாவது மகனை கரை சேர்த்து விடலாம் என்பது அவரது கணக்காக இருந்தது. இதன் காரணமாகவே ஓராண்டுக்கும் மேலாக காய்நகர்த்தி, தனது வாரிசுக்கு சீட் வாங்கினார் அவர். ஆனால் அதிமுக மாஜிக்களிடம் எழுந்துள்ள கோஷ்டி பூசல் அவரது கணக்கை தப்பாக்கியுள்ளது.
ராசிபுரம் தொகுதியில் அதிமுகவின் பரீட்சய முகங்களான மாஜி அமைச்சர்கள் சரோஜாவும், தனபாலும் இந்த தொகுதிக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் முட்டிமோதினர். ஆனால் மாவட்ட செயலாளரான தங்கமணியின் அதிகாரபலம், இருவருக்குமான வாய்ப்பை தட்டிப்பறித்தது. இதில் நொந்து போன, முன்னாள் சபாநாயகர் தனபால், உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஓய்வில் இருக்கிறார். அவரது மகன் லோகேஷ் தமிழ்செல்வன், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தின் ராசிபுரம் வேட்பாளராக தொகுதியில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அதேநேரத்தில் அதிமுகவில் சீட் கிடைக்காமல் அதிர்ச்சியில் உறைந்த மற்றொரு மாஜி அமைச்சரான சரோஜா, முற்றிலுமாக ஒதுங்கி நிற்கிறார். அவருக்கு தொகுதி முழுவதும் கணிசமான ஆதரவாளர்கள் உள்ளனர். இவர்கள் யாரும் பாஜ வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க செல்வதில்லை. இதேபோல் தொடர்ச்சியாக அனைத்து தேர்தல்களிலும் இரட்டை இலைக்கு ஓட்டு கேட்டுவிட்டு, தாமரைக்கு கேட்கணுமா? என்ற தயக்கமும் மூத்தநிர்வாகிகளிடம் உள்ளது. இதனால் தொகுதியின் பெரும்பாலான இடங்களில் ஒற்றை இலக்க நிர்வாகிகளுடன் சென்று ஓட்டு கேட்டு வருகிறார் பிரேம்குமார். பாடாதபாடு பட்டு சீட் வாங்கினோம். அதிமுக மாஜிக்களின் கோஷ்டி மோதல் கிடைக்கும் ஓட்டுக்கு உலை வைத்துவிடுமோ? என்ற தவிப்பில் இருக்கிறாராம் பாஜவின் மாநில துணைத்தலைவர்.
