நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்டு, நான்கு முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்று, இரண்டு முறை அமைச்சராக இருந்த தங்கமணி, தற்போது ஐந்தாவது முறையாக குமாரபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறார். அடுத்த தலைமுறையினருக்கு வழிவிடாமல், தொடர்ந்து போட்டியிடும் இவருக்கு வாக்காளர்களின் கேள்வி என்ற பெயரில், ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பரபரப்பை ஏற்படுத்தி வரும் இந்த ஆடியோவில் கீழ்கண்ட கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது.
குமாரபாளையம் தொகுதி முழுக்க, பல்வேறு தொழில்கள் இருந்தாலும், அவற்றின் மையப்புள்ளி நெசவு தொழிலே. ஒரு காலத்தில் நெசவில் செழித்து குபேரபுரியாக இருந்த குமாரபாளையம், இப்போ எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருப்பதற்கு யார் காரணம்? 20 ஆண்டுகளாக சாய சுத்திகரிப்பு நிலையம் கொண்டு வருவதாக சொல்லி, வாக்குறுதியை கொடுத்தீர்கள். ஆனால், அதற்கு மாறாக சாயச்சாலைகளை தான் அதிகம் பண்ணி இருக்கீங்க. இந்த முறையும் அதே வாக்குறுதியை சலிக்காம சொல்றீங்களே. மக்கள் மறந்து விட்டார்கள் என்ற நினைப்பா? ஜவுளி தொழில் நசிந்து, விசைத்தறிகளை எல்லாம் எடைக்கு போடும் நிலைக்கு வந்தது. இதற்கெல்லாம், என்ன காரணம். 20 ஆண்டு காலமாக எம்எல்ஏவாக, மந்திரியாக இருந்த நீங்க என்ன முயற்சி செஞ்சிருக்கீங்க? பக்கத்து தொகுதிகள் தொழில் கட்டமைப்பு, கல்வி வளர்ச்சி என பல்வேறு விதங்களில் முன்னேறி இருக்கு. ஆனா குமாரபாளையம் தொகுதியோட முன்னேற்றத்துக்கு நீங்க என்ன செஞ்சீங்க?
திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்திவேலூர் தொகுதிகளில், அரசின் அதிநவீன தலைமை மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இத்தனைக்கும் இதையெல்லாம் கொண்டு வந்தது முதல்முறை சட்டமன்ற உறுப்பினர்கள் தான். குமாரபாளையம், பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்த, நீங்க எடுத்த முயற்சி தான் என்ன? தொகுதியில் சுத்தமான குடிநீர் கிடைக்காம மக்கள் அல்லல் பட்டுக்கிட்டு இருக்காங்க. புற்றுநோய் பாதிப்புல தொல்லைப்பட்டுட்டு இருக்காங்க. சுகாதாரமான குடிநீர் கொடுக்கறதுக்கு, கடந்த 20 வருடங்களில் நீங்க என்ன முயற்சி எடுத்திருக்கீங்க.
ஆற்றங்கரையில இருக்கிற உங்க சாயச்சாலை கழிவு நீரை எங்க விட்டுக்கிட்டு இருக்கீங்க?. 20 வருஷம் எம்எல்ஏ, அமைச்சர் என பவர்புல்லா இருந்திருக்கிறீங்க. இந்த காலத்தில் என்னோட குடும்பத்தினரின் தேவைகளை எல்லாம் நிறைவேற்றி விட்டேன். இனி வாக்காளராகிய நீங்கள் தான் எனக்கு எல்லாம் என கூசாம பேசுகிறீர்களே, இது நியாயமா? நிச்சயம் இதற்கு காலம் பதில் சொல்லும். சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் இந்த ஆடியோ தங்கமணி வட்டாரத்தை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
* திருவண்ணாமலையில் 4 கி.மீ. தூரம் நடந்து சென்று வாக்கு சேகரிப்பு: மகளிர் உரிமைத்தொகையால் நான் நிம்மதியாக இருக்கிறேன்; முதல்வரின் கைகளை பற்றி மூதாட்டி நெகிழ்ச்சி
திருவண்ணாமலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று காலை 7 மணியளவில் நடைபயிற்சி மேற்கொண்டார். திருவண்ணாமலை மாட வீதியில் திருவூடல் தெருவில் தொடங்கி, தேரடி வீதி, காந்திசிலை சந்திப்பு, சின்னக்கடை தெரு, பழைய பஸ் நிலையம், அறிவொளி பூங்கா, போளூர் சாலை, அண்ணா நுழைவு வாயில் வரை சுமார் 4 கிமீ தூரம் நடந்து சென்று, திமுக வேட்பாளர்கள் திருவண்ணாமலை தொகுதி அமைச்சர் எ.வ.வேலு, கீழ்பென்னாத்தூர் தொகுதி துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
திருவூடல் தெரு கடலைக்கடை சந்திப்பு பகுதியில் உள்ள காய்கறி மார்க்கெட் பகுதிக்கு சென்ற முதல்வருக்கு, அங்கிருந்த வியாபாரிகள் பூங்கொத்து ெகாடுத்து வரவேற்றனர். மேலும், அந்த பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர்கள், முதல்வருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். முதல்வரின் திட்டங்கள் எல்லாம் தங்களுடைய குடும்பத்துக்கு மிகவும் உதவியாக இருக்கிறது என மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து, தேரடி தெருவில் கோயிலுக்கு சென்றுகொண்டிருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள், அங்கிருந்த வியாபாரிகள் அனைவரும் முதல்வருக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். வழிநெடுகிலும் இளைஞர்கள், மாணவர்கள், சிறுவர்கள், தாய்மார்கள் என அனைத்துத்தரப்பு மக்களும் ஆர்வமுடன் ஓடிவந்து முதல்வருக்கு கைகூப்பி நன்றியும், வாழ்த்தும் தெரிவித்தனர்.
பஸ் நிலையம் ரவுண்டானா சந்திப்பு பகுதியில் சாலையோரம் நின்றிருந்த மூதாட்டி ஒருவர் முதல்வரின் அருகே சென்று, அவரது கைகளை பற்றி, மகளிர் உரிமைத்தொகையால் நான் நிம்மதியாக இருக்கிறேன். நிச்சயம் நீங்கள்தான் ஜெயிப்பீர்கள் என கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல், பள்ளிக்கு சென்றுகொண்டிருந்த மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் ஆகியோர் முதல்வரை பார்த்ததும் ஓடிவந்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அப்போது, என்ன படிக்கிறீர்கள் என விசாரித்த முதல்வர், படிப்பு முக்கியம் நன்றாக படிக்க வேண்டும் என கூறினார். அண்ணா நுழைவு வாயில் அருகே தனது தந்தையுடன் வந்திருந்த குழந்தை, முதல்வரின் கன்னத்தில் முத்தமிட்டது. குழந்தையின் பேரன்பினால் முதல்வர் நெகிழ்ச்சி அடைந்தார்.
கிரிவலப்பாதையில் அண்ணா நுழைவு வாயில் அருகே அமைந்துள்ள கலைஞர் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். நடைபயிற்சியின் நிறைவாக, அண்ணா நுழைவு வாயில் அருகே உள்ள சிறிய டீ கடையில் அமர்ந்து டீ அருந்தினார். கடைக்கு திடீரென முதல்வர் வந்ததும், அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்களிடம் முதல்வர் நலன் விசாரித்தார். சுமார் 10 நிமிடங்கள் வரை அங்கிருந்த முதல்வர், அதன்பிறகு அங்கிருந்து பிரசார வாகனத்தில் புறப்பட்டு சென்றார்.
