திண்டுக்கல் தொகுதி திமுக வேட்பாளர் ஐ.பி.செந்தில்குமாருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி நேற்று வருகை தந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி பொதுமக்களின் ஆதரவோடு 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். கடந்த 5 ஆண்டுகளில் மக்களுக்கு திமுக செய்த பல்வேறு சாதனைகள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்திருக்கிறது. அவர்களின் ஏகோபித்த ஆதரவு திமுக கூட்டணிக்கு உள்ளது. திமுகவின் தேர்தல் அறிக்கை எங்கள் கூட்டணிக்கு பலம் சேர்ப்பதாக இருக்கிறது.
மகாராஷ்டிரா முதலமைச்சர் பாஜவை வெற்றி பெற வைத்தால் தான் மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் கிடைக்கும் என கூறியிருக்கிறார். இதுதான் பாஜ என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதுபோல் தேர்தல் களத்தில் உருட்டல், மிரட்டல், பிளாக் மெயில் போன்ற செயல்களை பாஜவினர் கையாண்டு வருகின்றனர். அவர்களின் எந்த சதி முயற்சியும் இங்கு வெற்றி பெறாது. தேர்தல் முடிவு அவர்களுக்கு சரியான பாடத்தை புகட்டும். பரப்புரைக்கு அனுமதி வழங்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு மட்டும்தான் உள்ளது. தமிழ்நாட்டு அதிகாரிகள் இருக்கலாம். ஆனால் தேர்தல் ஆணையம் தான் அவர்களை வழிநடத்துகிறது. விஜய் பரப்புரைக்கு காவல் துறை அனுமதி மறுக்கிறது என்பதற்கு திமுக காரணம் கிடையாது. வேண்டுமென்றே திமுகவிற்கு எதிராக இதை திருப்ப பார்க்கிறார்கள். மக்கள் அரசியல் அறியாதவர்கள் இல்லை. மக்களை ஏமாற்ற முடியாது. இவ்வாறு தெரிவித்தார்.
* எந்த அடிப்படையில் பாஜவுடன் எடப்பாடி கூட்டணி வைத்தார்?
தேர்தல் பிரசாரத்தில் திருமாவளவன் பேசுகையில், ‘‘நாங்கள் திமுகவுடன் கூட்டணி வைத்திருப்பதை நியாயப்படுத்த முடியும். அதிமுக பாஜவுடன் எந்த அடிப்படையில் கூட்டணி வைத்தது என்பதை எப்போதுமே நியாயப்படுத்த முடியாது. அந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு கட்சியும் ஒருவருக்கு ஒருவர் கடுமையாக விமர்சித்து கொண்டவர்கள். எடப்பாடியுடன் கூட்டணி வைத்தால் தூக்கு போட்டு சாகலாம் என்று சொன்ன தலைவர் அதிமுக கூட்டணியில் தற்போது இருக்கிறார். எடப்பாடியை கடுமையாக விமர்சித்த அன்புமணி ராமதாஸ் தற்போது அங்கு இருக்கிறார். பாஜவை கடுமையாக விமர்சித்த எடப்பாடி தற்போது அவர்களுடன் கூட்டணி வைத்துள்ளார். கொஞ்சம் கூட அவர்களுக்கு கருத்து அடிப்படையில் எந்த பொருத்தமும் கிடையாது. தற்போது தேர்தல் ஆதாயத்திற்கு மட்டுமே கைகோர்த்து உள்ளனர்’’ என்றார்.
* அதிமுக கூட்டணிக்கே விஜய்யால் பாதிப்பு: அடித்து சொல்லும் துரை வைகோ
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி., நேற்று கூட்டணி நிர்வாகிகளை சந்திந்து மதிமுக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டனார். இதனை தொடர்ந்து துரை வைகோ எம்.பி., நிருபர்களிடம் கூறியதாவது: மொடக்குறிச்சி பாஜ எம்எல்ஏ., கடந்த 5 ஆண்டுகளாக மக்களை சந்திக்கவில்லை. தொகுதி பக்கம் வராமல், அவரது குடும்பத்தை சேர்ந்தவர் மீண்டும் வேட்பாளராக போட்டியிடுகிறார். மக்களிடையே மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வரவேற்பு உள்ளது. இந்த தேர்தலில் 234 தொகுதியில் 200 தொகுதிகள் வெற்றி பெறுவோம்.
பல மாநிலங்களில் தேர்தல் நடக்கும் நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கலந்துகொள்ள முடியாத நிலையில் தொகுதி மறுவரையறை, பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு நிறைவேற்றியது ஜனநாயகத்திற்கு விரோதமானது. ஒன்றிய அரசு நயவஞ்சகத்துடன் இதனை கொண்டு வந்துள்ளது. தற்போது காஸ் தட்டுப்பாடு, விலை ஏற்றம் அடைந்துள்ளது. இது ஒன்றிய அரசின் அஜாக்கிரதை தான் காரணம். தேர்தல் ஆணையம் நடுநிலையோடு நடக்க வேண்டும் ஆனால் அப்படி நடப்பதில்லை. விஜய்க்கு இளைஞர்கள் மத்தியில் ஆதரவு உள்ளது. ஆனால் தேர்தலில் வாக்காக மாறுமா? என்பது கேள்வியாக உள்ளது. எனது கணிப்பின்படி தவெக 15% வாக்குகள் பெறும். இதனால் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு கூடும். விஜய்யால் அதிமுக கூட்டணிக்கு தான் பாதிப்பு அதிகம். இவ்வாறு பேசினார்.
