1. சென்னையில் வசிக்கும் போது மேலூர் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் மேலிடம் வாய்ப்பு கொடுத்துள்ளது பற்றி?
நான் 2001-ல் மதுரையில் குடியேறினேன். 2009 வரை சுமார் ஒன்பது ஆண்டுகள் அங்கே காங்கிரஸ் கட்சியிலும், இயக்கப் பணிகளிலும் தீவிரமாக உழைத்தேன். 2009ல் நான் தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடத்தான் சீட் கேட்டேன். ஆனால், கட்சி என்னை 500 கி.மீ தள்ளி இருக்கும் காஞ்சிபுரத்தில் போட்டியிடச் சொன்னது. அங்கே போட்டியிட்டு வெற்றியும் பெற்றேன். ஆனாலும் என் குடும்பம், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை என அனைத்தும் கடந்த 20 ஆண்டுகளாக மதுரையில்தான் இருந்தது.
தியாகராஜர் நடுநிலைப்பள்ளியில்தான் நான் வாக்களித்து வந்தேன். ஒரு மாதத்திற்கு முன்புதான் மதுராந்தகம், எழும்பூர் போன்ற சென்னையை ஒட்டிய பகுதிகளில் போட்டியிட வாய்ப்பு வரும் என்ற அடிப்படையில் என் வாக்கை சென்னைக்கு மாற்றினேன். ஆனால் அந்த பகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதேபோல் மேலூர் ஒரு இருப்புத் தொகுதியாக உள்ளது. மதுரையில் போட்டியிட நான் தகுதியாக உள்ளேன் என்பதால், என் உழைப்பையும் 20 ஆண்டுகால கட்சிப் பணியையும் அங்கீகரித்து, ராகுல் காந்தி எனக்கு இந்த பொதுத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்துள்ளார். இது 25 ஆண்டுகளுக்குப் பிறகு நான் இருக்கின்ற சொந்த மண்ணில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலூர் பொதுத்தொகுதியில் மக்கள் என்னை ‘மண்ணின் மைந்தனாக’ ஏற்றுக்கொண்டு வாய்ப்பு அளித்துள்ளனர்.
2. உள்ளூர் காங்கிரசாரின் ஒத்துழைப்பு எப்படி இருக்கிறது?
உள்ளூர் நிர்வாகிகள் தங்களுக்கு வாய்ப்பு கேட்பது அவர் அவர்களின் உரிமை. ஆனால், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஒரு முடிவை அறிவித்து, எனக்கு ‘ஏ’ மற்றும் ‘பி’ படிவங்கள் வந்து சேர்ந்த பிறகு, அவர்கள் அனைவரும் இப்போது என் வெற்றிக்காகத் தோளோடு தோள் நின்று உழைக்கிறார்கள். பழைய கசப்புகளை மறந்து அனைவரும் ஒற்றுமையாகச் செயல்படுகிறோம்.
3. மேலூர் தொகுதியில் உங்களுக்கான வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
மேலூர் தொகுதி தியாகசீலர் கக்கன் பிறந்த கர்ம பூமி. காலம் காலமாக தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்டோர், முஸ்லீம் மக்கள் கிறிஸ்தவர்கள் எல்லாம் சமூகங்களும் இணைந்து பணியாற்றுக்கின்ற ஒரு மாவட்டம். மோதல்கள், பிளவுகள் என்பது 25 ஆண்டுகளுக்கு முன் இருந்தத. இப்போது அவ்வாறு இல்லை. இங்கே அனைத்துச் சமூக மக்களும் அண்ணன் தம்பிகளாகப் பழகுகிறார்கள். விஸ்வநாதன் வந்ததும் நம் வீட்டு பிள்ளையாக, நமக்காக உழைக்கும் ஒரு வேலைக்காரனாக இருப்பேன் என்ற நம்பிக்கை மக்களுக்கு கிடைத்துள்ளது. இதனால் எனக்கு பெருவாரியாக மக்கள் ஆதரவும், மக்கள் கூட்டம் கிடைக்கிறது.
4. அதிமுக வெற்றிபெற்று வரும் மேலூர் தொகுதி இனி காங்கிரஸ் கோட்டையாக மாறுமா?
மேலூர் அதிமுகவின் தொகுதி அல்ல, இது வீர அண்ணல் அழகிரிசாமி போன்றவர்கள் இருமுறை வென்ற காங்கிரஸின் பாரம்பரியத் தொகுதி. நீண்ட இடைவேளைக்குப் பிறகு வரலாறு திரும்புகிறது. தமிழக முதல்வர் அண்ணன் ஸ்டாலின் ‘அரசாங்கம் 2.0’ அமைவதற்கு மேலூர் தொகுதி ஒரு மிகப்பெரிய சாட்சியாகவும் பலமாகவும் அமையும். திமுக அரசின் திட்டங்களான மகளிர் இலவசப் பேருந்து, ரூ.5,000 உதவித்தொகை மற்றும் சுய உதவிக்குழுக்களுக்கான சுழல் நிதி போன்றவை மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்தத் தொகுதியில் காங்கிரஸ் நிச்சயம் வெல்லும். காங்கிரஸ் கோட்டையாக மாறும்.
