8 கர்நாடக அரசு அதிகாரிகள் வீட்டில் ஒரே நேரத்தில் ரெய்டு: ரூ.6.14 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்

கர்நாடகாவில் சில அரசு அதிகாரிகளின் வீடுகளில் ஒரே நேரத்தில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையின் போது ரூ.6 கோடியே 14 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. தங்க நகைகள் மற்றும் ரொக்கப்பணம் என பல கோடி மதிப்பிலான சட்டவிரோதச் சொத்துக்கள் இந்த அதிரடி சோதனையில் கண்டறியப்பட்டன.

சோதனைக்கு உட்படுத்தப்பட்ட எட்டு அதிகாரிகளில், குடகு பகுதியை சேர்ந்த ஓர் உதவிச் செயற்பொறியாளர் (AEE), பீதார் பகுதியை சேர்ந்த நிதி கட்டுப்பாட்டாளர், மீன்வளத் துறையைச் சேர்ந்த ஓர் துணை இயக்குநர், ஓர் உதவிப் பொறியாளர், ஒரு உதவி மருந்து கட்டுப்பாட்டாளர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் ஆகியோர் அடங்குவர். ஊழல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட இந்த அதிரடி சோதனையின் முடிவில் 8 அரசு அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 8 அரசு அதிகாரிகளுக்கு எதிராக பதிவான புகார்களை தொடர்ந்து, வருமானத்திற்கு மீறிய சொத்துச் சேர்த்தல் தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையில், கர்நாடக லோக் ஆயுக்தா காவல்துறையினர் மாநிலம் முழுவதும் 35-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் சோதனைகளை நடத்தினர்.

லோக் ஆயுக்தா அதிகாரிகள் அளித்துள்ள தகவலின்படி கர்நாடக மாநிலம் மைசூரு, பெலகாவி, மங்களூரு, சித்ரதுர்கா, சிவமொக்கா, பல்லாரி, பீதர் மற்றும் குடகு ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சோதனைகள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் தொடர்புடைய குடியிருப்புகள், அலுவலகங்கள் மற்றும் சொத்துக்களை உள்ளடக்கியதாக இருந்தது.

பல இடங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட இந்த சோதனைகளின் போது அறியப்பட்ட வருமான ஆதாரங்களுக்கு பொருத்தமற்றதாகச் சந்தேகிக்கப்படும் கணிசமான அளவிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாக லோக் ஆயுக்தா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மாநில துறைகளில் ஊழலைக் கட்டுப்படுத்துவதற்காக, லோக் ஆயுக்தாவின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்த சோதனைகள் நடததப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர். நேற்று நடைபெற்ற அதிரடி சோதனையின் போது எட்டு அதிகாரிகளும், வருமானத்திற்கு அதிகமாக சுமார் ரூ.36 கோடியே 92 லட்சத்து 78 ஆயிரத்திற்கு சொத்து குவித்திருந்தது தெரியவந்தது. நகை, பணம், சொத்து ஆவணங்களை லோக் ஆயுக்தா போலீசார் கைப்பற்றி எடுத்து சென்றனர். இவர்கள் மீது சம்பந்தப்பட்ட லோக் ஆயுக்தா போலீஸ் நிலையங்களில் வழக்கும் பதிவு செய்யபட்டுள்ளது.

Related Stories: