போலி ஆவணங்கள் மூலம் நிலம், பணம் மோசடி கொல்கத்தாவில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ஈடி சோதனை

கொல்கத்தா: மேற்குவங்க மாநில தலைநகரான கொல்கத்தாவில் மெர்லின் குரூப் என்ற புகழ் பெற்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் போலியான ஆவணங்கள் மூலம் நில உரிமைகளை தவறாக காட்டி வணிக ரீதியான திட்டங்களை உருவாக்கி, பொதுமக்களிடம் மிகப்பெரிய அளவில் முதலீடுகளை பெற்று மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக பணமோசடி தடுப்பு சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.  இந்த விசாரணையின் ஒருபகுதியாக கொல்கத்தாவில் உள்ள மெர்லின் குரூப் நிறுவனம் மற்றும் அதன் விளம்பரதாரர்களான சுஷில் மோஹ்தா, சாகேத் மோஹ்தா ஆகியோருக்கு சொந்தமான 7 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் பணம், ஆவணங்கள் ஏதேனும் கைப்பற்றப்பட்டதா என்ற தகவல்கள் வெளியாகவில்லை. மேற்குவங்கத்தில் வரும் 23,29 ஆகிய தேதிகளில் பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: