5.25 சதவீதமாக நீடிப்பு குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டியில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

மும்பை: குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டியில் ரிசர்வ் வங்கி எந்த மாற்றமும் செய்யவில்லை. இது 5.25 சதவீதமாக நீடிக்கிறது. ரிசர்வ் வங்கி 2 மாதங்களுக்கு ஒரு முறை நிதிக் கொள்கை மறுசீராய்வு கூட்டம் நடத்துகிறது. இதில், வட்டி விகிதம் உள்ளிட்ட முக்கிய கொள்கை முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இந்நிலையில் நடப்பு நிதியாண்டுக்கான கூட்டம், ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்கோத்ரா தலைமையில் கடந்த 6ம் தேதி தொடங்கி, 3 நாட்கள் நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகளை கவர்னர் நேற்று அறிவித்தார்.

இதன்படி, குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டியில் எந்த மாற்றமும் செய்யவில்லை. இது 5.25 சதவீதமாக நீடிக்கிறது. கூட்டத்தில் பங்கேற்ற 6 உறுப்பினர்களும் வட்டி விகிதத்ததை மாற்ற வேண்டாம் என்று பரிந்துரைத்ததை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்திய பொருளாதாரம் வலுவாகவே இருக்கிறது. நாட்டின் ஜிடிபி நடப்பு நிதியாண்டில் 6.9 சதவீதமாக இருக்கும்.

மேற்காசிய போர் காரணமாக கடன் வழங்குதலில் குறிப்பிடத்தக்க பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. சொத்து மதிப்புக்கும் பெரிய ஆபத்து இல்லை. கடந்த 6 வாரங்களாக ஈரான் போர் காரணமாக எரிபொருட்கள் சப்ளையில் ஏற்பட்ட பாதிப்பு, பண வீக்கம் மற்றும் வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி இதுவரை குறுகிய கால கடன்களுக்கான வட்டியை 1.25 சதவீதம் குறைத்துள்ளது. இதன் அடிப்படையில் வங்கிகள் 0.9 சதவீத வட்டியைக் குறைத்திருக்கின்றன. வங்கிகளின் இந்த வட்டி குறைப்பு திருப்திகரமாகவே உள்ளது. வங்கி சாராத நிதி நிறுவனங்களை வகைப்படுத்த புதிய விதிமுறைகள் விரைவில் வகுக்கப்படும் என ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்தார்.

Related Stories: