கவுகாத்தி: மனைவி 3 பாஸ்போர்ட் வைத்திருப்பது எப்படி என்பது தொடர்பாக பதில் அளிக்காமல் அசாம் முதல்வர் என் மீது போலீசை ஏவி மிரட்டுகிறார் என்று பவன்கேரா குற்றம் சாட்டினார். அசாம் மாநிலத்தில் இன்று சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மனைவி ரினிகி புயான் சர்மா 3 வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பதாகவும், துபாய் மற்றும் அமெரிக்காவில் சொத்து வைத்திருப்பதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் பவன்கேரா குற்றம் சாட்டியிருந்தார். இதை முதல்வர் ஹிமந்தா மறுத்தார்.
மேலும் பவன்கேரா மீது முதல்வர் ஹிமந்தா மனைவி ரினிகி போலீசில் புகார் கொடுத்தார். இதை தொடர்ந்து அசாம் போலீசார் டெல்லி சென்று பவன்கேரா வீட்டில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அவரை கைது செய்ய தேடினார்கள். இந்த பிரச்னை குறித்து நேற்று பவன்கேரா விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில்,’ எங்கள் கட்சி உங்களிடம் சில கேள்விகளை மட்டுமே கேட்டது. ஏன் எங்களை அமைதியாக்க விரும்புகிறீர்கள்? நாங்கள் கேள்விகளைக் கேட்டுள்ளோம்;
எங்களுக்குப் பதில்களை அளியுங்கள். எங்கள் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்குப் பதிலாக, நீங்கள் அனைவரையும் அவதூறாகப் பேசுகிறீர்கள்; என் பின்னால் காவல்துறையை ஏவிவிட்டுள்ளீர்கள். நான் அவர்களுக்குப் பயப்படவில்லை. ஆனால், நான் இன்னும் பல கேள்விகளைக் கேட்க வேண்டியிருப்பதால், அவர்களைத் தவிர்த்து வருகிறேன். எனது குற்றச்சாட்டு விசாரணையின் மூலமாக மட்டுமே தெரியவரும். நீங்கள் ஆட்சியில் இருக்கிறீர்கள்; எங்களை மிரட்ட முயற்சிப்பதற்குப் பதிலாக, இந்தக் குற்றச்சாட்டுகளை நீங்கள் முறையாக விசாரிக்க வேண்டும்’ என்றார்.
