நாம் ஒன்றிணைந்து மகளிர் சக்தியை வலுப்படுத்துவோம்! பிரதமர் மோடி அறிக்கை

புதுடெல்லி: பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கை: வரும் நாட்களில், இந்தியா முழுவதும் பண்டிகைக் காலம் களைகட்டும். நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் நடைபெறும். அசாம் மக்கள் ரோங்காலி பிஹுவையும், ஒடிசா மக்கள் மகா பிஷுபா பானா சங்கராந்தியையும் கொண்டாடுவார்கள். மேற்கு வங்கம் பொய்லா போயிஷாக் என்ற வங்காளப் புத்தாண்டை வரவேற்கும். கேரளாவில், விஷு மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும். தமிழ்நாட்டில் புத்தாண்டு கொண்டாடப்படும். இது நம்பிக்கையையும் ஆக்கப்பூர்வ சிந்தனையையும் கொண்டுவரும்.

இந்தியா மற்றும் உலகம் முழுவதும் இந்தப் பண்டிகைகளைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தச் சிறப்புத் தருணங்களுக்கும் கூடுதலாக, புதுப்பித்தல் உணர்வு நம் உள்ளங்களையும் மனங்களையும் நிரப்பும் வேளையில், நமது தேசம் மற்றொரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தின் வாயிலில் நிற்கிறது. இது நமது ஜனநாயகத்தின் அடித்தளங்களை ஆழப்படுத்துவதற்கும், சமத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கும் நமது கூட்டு உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிசெய்வதற்குமான ஒரு வாய்ப்பாகும்.

மகளிர் இட ஒதுக்கீட்டை மேம்படுத்தும் ஒரு முக்கிய மசோதாவை விவாதித்து நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றம் ஏப்ரல் 16 அன்று கூட்டப்படவுள்ளது. இதனை வெறுமனே சட்டமியற்றும் ஒரு செயல்பாடு என்று கூறுவது குறைத்து மதிப்பிடுவதாகவே இருக்கும். இது இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான பெண்களின் விருப்பங்களின் பிரதிபலிப்பாகும். இந்திய மக்கள்தொகையில் ஏறக்குறைய பாதி பேர் பெண்களாவர்.

இருப்பினும், அரசியலிலும் சட்டமியற்றும் அமைப்புகளிலும் அவர்களின் பிரதிநிதித்துவம், சமூகத்தில் அவர்களின் பங்கிற்கு ஏற்ற அளவு எப்போதும் இருந்ததில்லை. இது துரதிர்ஷ்டவசமானது. 2029 மக்களவைத் தேர்தல்களும், வரவிருக்கும் பல்வேறு மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களும் மகளிர் இட ஒதுக்கீட்டை உள்ளடக்கி நடத்தப்படுவது கட்டாயமாகும். இந்தத் தருணம் கூட்டு நடவடிக்கையைக் கோருகிறது. இது ஏதேனும் ஓர் அரசு, கட்சி அல்லது தனிநபரைப் பற்றியது அல்ல.

நாடு முழுவதுமே இந்த நடவடிக்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதை நனவாக்க ஒன்றிணைவதைப் பற்றியது. இது நமது மகளிர் சக்திக்கு நாம் செலுத்த வேண்டிய கடமையாகும். அதனால்தான், மகளிர் இட ஒதுக்கீட்டிற்கான ஒரு மசோதா நிறைவேற்றப்படும்போது, ​​அது பரந்த அளவிலான ஒருமித்த கருத்தைப் பிரதிபலிக்க வேண்டும்; பரந்த தேசிய நலனை அடிப்படையாகக் கொண்டு வழிநடத்தப்பட வேண்டும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நாம் அணுகும் வேளையில், கட்சி வேறுபாடின்றி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து, இந்தியப் பெண்களுக்கான இந்த முக்கிய முன்னெடுப்பிற்கு ஆதரவளிக்க வேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.

இந்த வாய்ப்பை நாம் பொறுப்புணர்ச்சியுடனும் குறிக்கோளுடனும் பயன்படுத்திக்கொள்வோம். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில், வேறுபாடுகளைக் கடந்து ஒற்றுமையாகச் செயல்பட முடியும் என்பதை இந்தியா எப்போதுமே நிரூபித்துள்ளது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னோக்கிச் சென்று, அரசியல் சட்ட விழுமியங்களை வலுப்படுத்தி, தேச முன்னேற்றத்திற்காக நமது மகளிர் சக்தியை வலுபடுத்துவோம்.

Related Stories: