திருவனந்தபுரம்: கேரளா,அசாம், புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களில் இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதி மார்ச் 15ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் கேரளா, புதுச்சேரி, அசாம் மாநிலத்தில் உள்ள தொகுதிகளில் ஒரே கட்டமாக ஏப்.9ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், தமிழ்நாட்டில் ஏப்.23ஆம் தேதியும், மேற்குவங்கத்தில் இரண்டு கட்டங்களாக ஏப்.23 மற்றும் ஏப்.29ஆம் தேதியும் தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதை முன்னிட்டு கேரளா, புதுச்ேசரி, அசாமில் கடந்த 23 நாட்களாக அனல் பறக்க நடைபெற்று வந்த பிரசாரம் நேற்று முன்தினம் மாலையுடன் ஓய்ந்தது. இன்று கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கும், அசாமில் உள்ள 126 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள 30 ெதாகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
கேரளா: கேரளாவில் சுயேட்சைகள் உள்பட மொத்தம் 883 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவுக்காக 30,495 மையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. எஸ்ஐஆருக்கு பின்னர் கேரளாவில் மொத்தம் 2 கோடியே 71 லட்சத்து 42 ஆயிரத்து 952 வாக்காளர்கள் உள்ளனர். வாக்குப்பதிவுக்காக 1.46 லட்சம் ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். கேரளாவில் மொத்தம் 2500 பிரச்னைக்குரிய பூத்துகள் இருப்பதாகவும், இங்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் மாநில தலைமை தேர்தல் அதிகாரி ரத்தன் யு. கேல்கர் கூறியுள்ளார்.
140 கம்பெனி துணை ராணுவம், 20 கம்பெனி தமிழ்நாடு போலீஸ் உள்பட 76 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று கேரள டிஜிபி ரவடா சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்குப்பதிவு மையங்களில் 18 முதல் 19 வயதுக்குட்பட்ட புதிய வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு அல்வா வழங்க தேர்தல் ஆணையம் தீர்மானித்துள்ளது. இதேபோல் 2 கிமீ வரை தொலைவில் உள்ள மையங்களில் வாக்களிக்க செல்வதற்கு ஊபர் நிறுவனத்துடன் இணைந்து இலவச ஆட்டோ சவாரிக்கும் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
அசாம்: 126 உறுப்பினர்களைக் கொண்ட அசாம் சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் 722 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். 35 மாவட்டங்களில் அமைந்துள்ள 31,490 வாக்குச்சாவடிகளில், காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். 1.25 கோடி பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த 318 பேர் உட்பட, மொத்தம் 2.50 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
காங்கிரஸ் கட்சி அதிகபட்சமாக 99 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக பாஜ 90 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மொத்த வேட்பாளர்களில் 59 பேர் பெண்கள் ஆவர்; இதில் காங்கிரஸ் கட்சி அதிகபட்சமாக 14 பெண் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. அதைத் தொடர்ந்து பாஜக ஏழு பெண் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
புதுச்சேரி: 30 தொகுதிகள் கொண்ட புதுச்சேரியில் 294 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். சுமார் 9.50 லட்சம் வாக்காளர்கள் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 1,099 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன; அவற்றில் 209 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடியாக கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
* கேரளாவில் 11 தொகுதிகளில் மட்டுமே ஆண் வாக்காளர்கள் அதிகம்
கேரளாவில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் தான் அதிகமாக உள்ளனர். மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,71,42,952 ஆகும். இதில் 1,39,21,868 பேர் பெண்கள். ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 1,32,20,811. மாற்றுப் பாலினத்தவர் 273. ஆண்களை விட பெண் வாக்காளர்கள் 7,01,057 பேர் அதிகமாகும்.
கேரளாவில் மொத்தம் 140 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில் 11 தொகுதிகளில் மட்டும் தான் பெண்களை விட ஆண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 129 தொகுதிகளிலும் ஆண்களைவிட 1000க்கும் அதிகமான பெண் வாக்காளர்கள் உள்ளனர்.
