பாபோஸ்: கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 2வது சுற்றில் கருப்பு நிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா டிரா கண்டார். உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியனான இந்திய வீரர் குகேஷ், சீன வீராங்கனை ஜூ வென்ஜூன் ஆகியோருடன் மோத போகும் வீரர், வீராங்கனை யார்? என்பதை நிர்ணயிப்பதற்கான கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் சைப்ரஸ் நாட்டில் நடந்து வருகிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 8 பேர் கலந்துகொண்டுள்ளனர்.
இவர்கள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். அதாவது 14வது சுற்று முடிவில் அதிக புள்ளிகள் எடுக்கும் வீரர், வீராங்கனை பட்டத்தை வெல்வதுடன், உலக செஸ் சாம்பியன்ஷிப்புக்கு தகுதி பெறுவர். ஆண்கள் பிரிவில் தனது முதல் ஆட்டத்தில் நெதர்லாந்தின் அனிஷ் கிரியை வீழ்த்திய இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, 2வது சுற்றில் சீனாவின் வெய்யியுடன் மோதினார்.
கருப்பு நிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா, 48வது நகர்த்தலில் டிரா கண்டார். பேபியானா கருணா (அமெரிக்கா)-அனிஷ் கிரி (நெதர்லாந்து) இடையிலான மற்றொரு ஆட்டமும் டிராவில் முடிந்தது. பெண்கள் பிரிவில் 2வது நாள் ஆட்டங்கள் அனைத்தும் டிராவில் முடிந்தன. இந்தியாவின் ஆர்.வைஷாலி (பிரக்ஞானந்தாவின் சகோதரி), திவ்யா தேஷ்முக் நேருக்கு நேர் மோதிய ஆட்டம், 46வது நகர்த்தலில் டிரா ஆனது.
