கவுகாத்தி: 2026 ஐபிஎல் சீசனின் 3வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. கவுகாத்தி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 127 ரன்களுக்குச் சுருண்டது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி சூர்யவன்ஷி, பராக்கின் அதிரடியால் 12.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டி அபார வெற்றி
பெற்றது.
வெற்றி குறித்து ரியான் பராக் கூறியதாவது: பிட்ச் ஈரப்பதத்துடன் இருந்ததால் அது பவுலர்களின் பணியை எளிதாக்கியது. கவுகாத்தி மைதானம் ஜட்டு பாய்க்கு (ரவீந்திர ஜடேஜா) மிகவும் சாதகமாக அமைந்தது. பிரிஜேஷ் சர்மாவும் பிரமிக்க தக்க வகையில் பந்துவீசினார். அனைவருமே தங்களது பங்களிப்பைச் சரியாக வழங்கியதால் வெற்றி வசமானது. இந்தப் போட்டியில் 15 வயது வைபவ் 17 பந்துகளில் 52 ரன்கள் குவித்தது வியப்பாக இருந்தது. வைபவ் வலைப்பயிற்சியில் விளையாடுவதைப் பார்த்தபோதே நாங்கள் மிரண்டு போனோம். அவனிடம் நான் ஒன்றே ஒன்றுதான் சொன்னேன்.
இந்த சீசனில் 14 போட்டிகளிலும் அணியில் நீ நிச்சயம் விளையாடுவாய். ஊடகங்களில் வரும் செய்திகளோ அல்லது ஆட்டத்தில் நடக்கும் விஷயங்களோ உன்னைத் தொந்தரவு செய்யாமல் பார்த்துக்கொள். இடது மற்றும் வலது கை பேட்ஸ்மேன் கூட்டணி அமைய வேண்டும் என்பதற்காகவே துருவ் ஜூரலை 3வது இடத்திலும், ஹெட்மையரை 5வது இடத்திலும் களம் இறக்கத் தீர்மானித்தோம். இந்தத் திட்டம் இன்று பெரிதும் கைகொடுத்தது. இதே போல ஒரு வலுவான அணியாக வரும் போட்டிகளிலும் தொடர்ந்து வெற்றி பெற முயற்சிப்போம். நாங்கள் புத்திசாலித்தனமான கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம். இந்த ஆண்டு கோப்பையை வெல்வது மட்டுமே எங்களது இலக்கு. இவ்வாறு ரியான் பராக் கூறினார்.
சிஎஸ்கே.வின் பலவீனம்… போட்டு உடைத்த ஜட்டு!
ஐபிஎல் தொடரில் இந்த ஆண்டு சீசனில் சிஎஸ்கே அணியின் ஆல்வுண்டரான ரவீந்திரஜடேஜா, ராஜஸ்தான் அணிக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து சென்னை அணியுடன் நேற்று நடந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் சார்பில் ரவீந்திர ஜடேஜா, ஒரே ஓவரில் சர்பராஸ் கான் (17) மற்றும் சிவம் துபே (6) ஆகியோரை வீழ்த்தி சிஎஸ்கே அணியின் சரிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். போட்டிக்கு பிறகு அவர் கூறுகையில்,‘‘இந்த பிங்க் நிற ஜெர்சி எனக்கு நன்றாகவே பொருந்துகிறது. சென்னை அணியுடன் அதிக ஆண்டுகள் விளையாடி இருப்பதால் அவர்களின் பலவீனத்தை நன்றாக அறிவேன். சிவம் துபேவை எனக்கு நீண்ட நாட்களாக தெரியும். சிஎஸ்கே.யில் இருந்தபோது வலைப்பயிற்சியில் அவருக்கு நான் நிறையப் பந்துவீசி இருக்கிறேன். எனவே, அவர் சுழற்பந்து வீச்சை எப்படி எதிர்கொள்வார் என்பது எனக்கு அக்குவேறு ஆணிவேறாகத் தெரியும். அவருடன் எனக்கு நிறைய பரிட்சயம் இருப்பதால், எப்படியும் அவர் எனக்கு எதிராகப் பெரிய ஷாட்களை ஆட முயற்சிப்பார் என்பதை கணித்தேன். அவர் ஒரு சிக்ஸர் அடித்த பிறகும், பின்வாங்காமல் திட்டமிட்டு ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே பந்தை வீசி அவரை அவுட் ஆக்கினேன்.
கவுகாத்தி ஆடுகளத்தில் பந்து நன்றாகத் திரும்பியதால் பந்துவீச்சை மிகவும் ரசித்து செய்தேன். சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்வது மட்டுமே எனது வேலையாக இருந்தது. மீதியை ஆடுகளம் பார்த்துக்கொண்டது’’ என்று கூறினார்.
தவறில் பாடம் கற்க வேண்டும்;
தோல்வி குறித்து சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறுகையில், ‘‘நேற்றைய போட்டியில் முதல் பேட்டிங்கின்போது ஆடுகளம் சற்று கடினமாக இருந்தது. குறிப்பாக ஆர்ச்சர், பர்கர் பந்துவீச்சை எதிர்கொள்வது கடினமாக இருந்தது. சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் ஆடுகளம் சாதகமாக இருந்தது. நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்து 150 – 160 ரன்கள் அடித்திருக்க வேண்டும். அப்படி அடித்திருந்தால் ஆட்டத்தை கடைசி வரை கொண்டு சென்றிருக்கலாம். இந்த தோல்வியை அப்படியே ஒதுக்கி வைத்துவிட்டு, இங்கிருந்து நகர வேண்டும். அடுத்த போட்டியில் சிறப்பாக விளையாட என்ன தேவையோ அதை செய்ய தயாராக வேண்டும். மனரீதியாக நாங்கள் நல்ல நிலையில் இருக்க முயற்சிக்கிறோம். அணியில் இளம் வீரர்கள் அதிகம் உள்ளனர். அனைவருக்கும் இந்த தோல்வி சற்று பதற்றத்தை கொடுத்திருக்கும். தவறில் இருந்து பாடம் கற்று முன்னேற இந்த தோல்வி வழிவகுக்கும்’’ என்றார்.
