13 ஆண்டுக்கு பின் முதல் போட்டியில் வென்ற மும்பை; தாகூர் பந்துவீசிய விதம் அபாரமானது: கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டி

 

மும்பை: 19வது சீசன் ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த 2வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதின. முதலில் பேட் செய்த கேகேஆர் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 220 ரன் அடித்தது. அதிகபட்சமாக கேப்டன் ரகானே 67, ரகுவன்ஷி 51, ரிங்கு சிங் 33 ரன் எடுத்தனர். மும்பை பவுலிங்கில் ஷர்துல் தாகூர் 3 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் களம் இறங்கிய மும்பை அணியில் ரோகித்சர்மா 38 பந்தில் 78, ரியான் ரிகெல்டன் 43 பந்தில் 81 ரன் அடித்தனர். 19.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 224 ரன் எடுத்த மும்பை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஷர்துல் தாகூர் ஆட்டநாயகன் விருது பெற்றார். 2012ம்ஆண்டுக்கு பின் மும்பை அணி ஐபிஎல்லில் முதல்போட்டியில் வென்றுள்ளது. வெற்றிக்கு பின் மும்பை கேப்டன் ஹர்திக்பாண்டியா ”இந்த வெற்றி மூலம் நீண்ட காத்திருப்பு முடிவுக்கு வந்தது. ஒவ்வொரு முறையும் சிறப்பாகத் தொடங்கி, இந்த வெற்றியை அடைந்ததில் ஒட்டுமொத்த குழுவும் மகிழ்ச்சியடைந்தது.

கேகேஆரை 240 அல்லது 250 ரன்னுக்குள் கட்டுப்படுத்திய பந்துவீச்சாளர்கள் பாராட்டத்தக்கவர்கள். அவை கடின இலக்குகளாக இருந்தாலும், 220 ரன் எப்பொழுதும் துரத்தக்கூடியதே. ரோகித், ரிக்கல்டன் ஆட்டம் அபாரமாக இருந்தது. ரோகித் சிலமுறை ஷாட்களை ஆடும்போது, அது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும். அது மிகச்சிறந்த மற்றும் அபாரமான ஆட்டம். கடந்த சீசனில் ரியான் எங்களுக்கு சிறப்பாகச் செயல்பட்டார். க்வின்னி ஒரு மேன்மையான மனிதர். அணியின் தொடர்ச்சிக்கு அவர் புரிதலுடன் ஆதரவளித்தார். அது பலனளித்தது மகிழ்ச்சி. தாகூர் பந்துவீசிய விதம் அபாரமானது. அணி மாறியது போதும், உனது மீதி வாழ்க்கை(கிரிக்கெட்) முழுவதும் எங்கள் அணியிலேயே இருக்க வேண்டும் என அவரிடம் கூறினேன்’’ என்றார்.

 

Related Stories: