127 ரன்னி்ல் சுருண்ட சென்னை: ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி

கவுகாத்தி: ஐபிஎல் 19வது தொடரின் 3வது போட்டி கவுகாத்தியில் நேற்று நடந்தது. அப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) – ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதையடுத்து, சென்னை அணியின் துவக்க வீரர்களாக சஞ்சு சாம்சன், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். துவக்கம் முதல் ராஜஸ்தான் அணியினர் நேர்த்தியாக பந்து வீசி சென்னை வீரர்களை திணறடித்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் (6 ரன்), நான்ட்ரே பர்கர் வீசிய 2வது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டம் இழந்தார்.

அவரைத் தொடர்ந்து ருதுராஜும் 6 ரன்னில் ஜோப்ரா ஆர்ச்சரிடம் கிளீன் போல்டானார். அடுத்து வந்த ஆயுஷ் மாத்ரே, பர்கர் வீசிய 4வது ஓவரின் முதல் பந்தில் ரன் எடுக்காமல் அவுட்டாகி நடையை கட்டினார். பின் வந்த மேத்யூ ஷார்ட், 2 ரன் மட்டும் எடுத்து, சந்தீப் சர்மாவிடம் வீழ்ந்தார். அவரைத் தொடர்ந்து, ஆயுஷ் மாத்ரேவுக்கு மாற்றாக இம்பேக்ட் வீரராக அனுப்பப்பட்ட சர்பராஸ் கான் 17 ரன் எடுத்திருந்தபோது, ரவீந்திர ஜடேஜா பந்தில், எல்பிடபிள்யு ஆனார். அடுத்து வந்த சிவம் தூபே 6 ரன்னில் ஜடேஜாவிடமும், கார்த்திக் சர்மா 18 ரன்னில் பிரிஜேஷ் சர்மாவிடமும், நூர் அஹமது, 1 ரன்னில் ஜோப்ரா ஆர்ச்சரிடமும் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

அதனால், 13 ஓவரில் சென்னை அணி, 8 விக்கெட் இழப்புக்கு 82 ரன் மட்டுமே எடுத்து திணறியது. 16வது ஓவரை வீசிய ரவி பிஷ்னோய், மேட் ஹென்றியை 5 ரன்னில் ஆட்டமிழக்கச் செய்தார். சென்னை அணியில் ஓரளவு தாக்குப்பிடித்து ஆடிய ஜேமி ஓவர்டன் (36 பந்து, 2 சிக்சர், 2 பவுண்டரி, 43 ரன்) கடைசி ஓவரில் ரன் அவுட்டானார். அதனால், 19.4 ஓவரில் சென்னை அணி 127 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஆர்ஆர் தரப்பில் ஆர்ச்சர், பர்கர், ஜடேஜா தலா 2, பிரிஜேஷ், சந்தீப், பிஷ்னோய், தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் அந்த அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

* வெறும் 6 ரன்னில் பஞ்சாய் பறந்த சஞ்சு
ஐபிஎல் போட்டிகளில் 5 முறை வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு துவக்கம் முதல் உந்து சக்தியாகவும், வழிகாட்டியாகவும் திகழ்ந்து வந்த முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, கடந்த சில ஆண்டுகளாக சரிவர ஆட முடியாமல் திணறி வருகிறார். அதன் காரணமாக, அவருக்கு பின்னால் சிஎஸ்கேவுக்கு பக்க பலமாக இருப்பார் என்ற நோக்கில் சஞ்சு சாம்சனுக்கு வலை வீசப்பட்டது. அதேசமயம் நீண்ட காலமாக தன் வசம் இருந்த சஞ்சு சாம்சனை விட்டுத் தர, ராஜஸ்தான் ராயல் அணியும் முன் வந்தது.

அதன் பின் நடந்த பேரங்களின்படி, சிஎஸ்கேவுக்கு பல முறை வெற்றி தேடித்தந்த முன்னணி வீரர் ரவீந்திர ஜடேஜாவும், சாம் கர்ரனும், ராஜஸ்தானுக்கு அளிக்கப்பட்டு அவர்களுக்கு மாற்றாக சஞ்சு சாம்சனை சிஎஸ்கே பெற்றது. அவருக்கு ஆண்டு வருமானமாக ரூ. 18 கோடியும் அளிக்கப்பட்டது. இவ்வாறாக சிஎஸ்கே அணியில் சேர்க்கப்பட்ட சஞ்சு, தான் ஏற்கனவே ஆடி வந்த ராஜஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் நேற்று, சிஎஸ்கேவுக்காக களமிறங்கினார். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே பேட்டிங்கை துவக்கிய அவர் 7 பந்துகளை மட்டுமே சந்தித்து 6 ரன்கள் மட்டும் எடுத்து நான்ட்ரே பர்கர் பந்துக்கு இரையானார். சிஎஸ்கேவுக்கு பெரிய ஸ்கோர் அடித்து தருவார் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்த சென்னை ரசிகர்களுக்கு, சஞ்சு சொற்ப ரன்களில் வீழ்ந்தது பெரியளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Related Stories: