தேர்தல் பணியில் ஈடுபடும் 9,604 பேருக்கு சிறப்பு பயிற்சி: மாவட்ட தேர்தல் அலுவலர் பார்வையிட்டார்

 

விருதுநகர், மார்ச் 31: விருதுநகர் மாவட்டத்தில் ஏழு சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள், அலுவலர்கள் 9,604 பேருக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. பயிற்சி வகுப்பை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சுகபுத்ரா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த பணியில் ஈடுபட உள்ள வாக்குச் சாவடி தலைமை அலுவலர், வாக்குச் சாவடி அலுவலர்கள் 1, 2, 3 என வாக்குசாவடிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் பணியாற்ற இருக்கும் அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கும் சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் மண்டல அலுவலர்கள் வாக்குப் பதிவு பணிகள் குறித்து பயிற்சி அளித்தனர்.

ராஜபாளையம் தொகுதிக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்ற பி.ஏ.சின்னையா ராஜா நினைவு மேல்நிலைப் பள்ளியில் 1,348 பேர் கலந்து கொண்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்ற கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 1,360 அலுவலர்கள் கலந்து கொண்டனர், சாத்தூர் தொகுதிக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்ற எஸ்.ஆர்.என்.எம் கல்லூரியில் 1,347 அலுவலர்கள் கலந்து கொண்டனர். சிவகாசி தொகுதிக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்ற எஸ்.எச்.என்.வி. மேல்நிலைப் பள்ளியில் 1,563 அலுவலர்கள் கலந்து கொண்டனர். விருதுநகர் தொகுதிக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்ற கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1,448 அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அருப்புக்கோட்டை தொகுதிக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்ற தேவாங்கர் கலைக்கல்லூரியில் 980 அலுவலர்களும், திருச்சுழி தொகுதிக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்ற சேது தொழில்நுட்ப கல்லூரியில் 1,558 அலுவலர்களும் கலந்து கொண்டனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள மொத்தம் 9,604 ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு பயிற்சிகள் நேற்று அளிக்கப்பட்டன. இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற இடங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் சுகபுத்ரா நேரில் சென்று ஆய்வு மேற்கண்டார்.

அப்போது அவர் பேசுகையில், ஜனநாயகக் கடமையான தேர்தல் பணியில் எவ்விதத் தொய்வுமின்றி, நுணுக்கமான தொழில்நுட்பக் குறைபாடுகளையும் கையாள்வதற்கு இந்தப் பயிற்சி மிக அவசியம். வாக்குப்பதிவு நாளன்று அலுவலர்கள் எவ்விதப் பதற்றமும் இன்றிச் செயல்பட வேண்டும் என்றார். இந்த ஆய்வின் போது அந்தந்தத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

 

Related Stories: