திருவாரூரில் உரிய ஆவணமின்றி பைக்கில் எடுத்து சென்ற ரூ.54 ஆயிரம் பறிமுதல்

 

திருவாரூர், மார்ச் 31: திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உரிய ஆவணமில்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ.54 ஆயிரத்து 940 மற்றும் ரூ.23 ஆயிரம் மதிப்புடைய பித்தளை குத்துவிளக்குகள் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். திருவாரூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி பறக்கும் படை ஒரு மாஜிஸ்ட்ரேட் நிலை அலுவலர் தலைமையில் காவல் துறை ஆய்வாளர், ஆயுதம் தாங்கிய போலீசார் மற்றும் ஒரு வீடியோகிராபர் வீதம் 36 குழுக்கள் அமைக்கப்பட்டு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ரொக்கமாக எடுத்து செல்வது மற்றும் ரூ.10 ஆயிரத்திற்கு மேல் பொருளாக உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்படும் போது அவை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் 36 நிலை கண்காணிப்புக்குழுவும் அமைக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு மாஜிஸ்ட்ரேட் நிலை அலுவலர் மற்றும் காவலர்களுடன் இயங்கி வரும் நிலையில் இந்த குழு தணிக்கை சாவடி அமைத்து பெருமளவில் பணம் எடுத்துச் செல்லுதல், கள்ளத்தனமாக மது எடுத்து செல்வது, சந்தேகப்படும்படியாக பொருட்கள் ஏதும், படைக்கலங்கள், வெடிப்பொருட்கள் ஆகியன எந்த வகையிலும் எடுத்து செல்லாத வகையில் கணிகாணித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொரடாச்சேரி பத்தூர் பாலம் அருகே முருகானந்தம் என்பவர் தலைமையிலான பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் அந்த வழியாக டூவிலரில் வந்த கும்பகோணம் மேலக்காவேரியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் உரிய ஆவணமில்லாமல் எடுத்துவந்த ரூ.54 ஆயிரத்து 940 மற்றும் காட்டூர் தபால் நிலையம் அருகே கார்த்தீபன் என்பவர் தலைமையிலான பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் அந்த வழியாக டூவிலரில் வந்த தஞ்சை மாவட்டம் திருநறையூரை சேர்ந்த சிவதாஸ் என்பவர் உரிய ஆவணமில்லாமல் எடுத்து வந்த ரூ.23 ஆயிரம் மதிப்புடைய 22 பித்தளை குத்துவிளக்குகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு திருவாரூர் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் சத்யாவிடம் ஓப்படைக்கப்பட்டது.

 

Related Stories: