பெரம்பலூர்,மார்ச் 31: பெரம்பலூர் ஸ்ரீ மதன கோபால சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பெரம்பலூர் நகராட்சி துறையூர் சாலையில் தெப்பக்குளம் கிழக்கே அமைந்துள்ள ஸ்ரீ மரகதவல்லி தாயார் சமேத மதன கோபால சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர பெருந் திருவிழாவின் முக்கிய நிகழ்வான 7ம் நாள் நேற்று திருக்கல்யாணம் உற்சவம் விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ மாதனகோபால சுவாமி எழுந்தருளி, யாக சாலைகள் அமைத்து பட்டாச்சாரியார்களின் வேதம் மந்திரம் முழங்க, பெருமாள் அம்பாளுக்கு மாலை மாற்று வைபவம் நடத்தி வைக்கப் பட்டது. மாலை 6 முதல் இரவு 8 மணி அளவில் திருமண வைபவம் பெருமாளுக்கு பக்தர்கள் புடை சூழ கோவிந்தா முழக்கமிட மங்கள வாத்தியம் முழங்க வெகு விமர்சையாக நடைபெற்றது. விழா உபயதாரர் மருத்துவர் பாலாஜி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
நிகழ்வில் செயல் அலுவலர் அசனாம்பிகை. (கூ.பொ) முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், குமார், சரவணன் மற்றும் பெரம்பலூர், துறைமங்கலம், அரணாரை சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெருமாள் பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாணத்தைக் கண்டு கோவிந்தா கோவிந்தா முழக்கங்களுடன் பெருமாள் அருள் பெற்றனர். பூஜைகளை பட்டாபி பட்டாச்சாரியார் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து இரவு பெருமாள் பூ பல்லக்கில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் உலா வந்து திருக்கோயில் அடைந்தார்.
