தேர்தல் ஆணைய விதி முறைகளை வேட்பாளர்கள், கட்சியினர் பின்பற்றி வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும்

 

திருவாரூர், மார்ச் 31: திருவாரூர் மாவட்டத்தில் நேற்று வேட்பு மனு தாக்கல் துவங்கிய நிலையில் தேர்தல் நடத்தும் அலுவலகங்களில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மோகனசந்திரன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தேர்தல் ஆணைய விதிமுறைகளை கட்சியினர், வேட்பாளர்கள் பின்பற்றி வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் அலுவலர் மோகனசந்திரன் கூறினார். தமிழகத்தில் அடுத்த மாதம் 23ந் தேதி சட்டமன்ற பொது தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலகமாக ஆர்.டி.ஓ அலுவலகமும், தேர்தல் நடத்தும் அலுவலராக ஆர்.டி.ஒ சத்யாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலகமாக அங்குள்ள ஆர்.டி.ஓ அலுவலகமும், தேர்தல் நடத்தும் அலுவலராக ஆர்.டி.ஓ யோகேஸ்வரனும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் திருத்துறைப்பூண்டி மற்றும் நன்னிலம் தொகுதிகளுக்கு அங்குள்ள தாலுகா அலுவலகங்கள் தேர்தல் நடத்தும் அலுவலகமாக இயங்கி வரும் நிலையில் திருத்துறைப்பூண்டி தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட வழங்கல் அலுவலர் செல்வபாண்டி, நன்னிலம் தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலராக கலால் உதவி ஆணையர் ரவி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் நேற்று துவங்கிய நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் இடங்களில் வேட்பாளர்களுக்கு தேவையான விண்ணப்ப படிவங்கள் உரிய முறையில் உள்ளதா என்பது குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதன்படி, திருவாரூர், மன்னார்குடி ஆர்.டி.ஒ அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்ட நிலையில் கட்டுப்பாட்டு அறையிலுள்ள புகார் பதிவேடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் நன்னிலம் தாலுக்கா அலுவலகத்திலும் ஆய்வு மேற்கொண்ட நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு வைப்பறை தொடர் கண்காணிப்பில் இருந்து வருவதையும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மோகனசந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் தெரிவித்ததாவது: இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (நேற்று) தொடங்கி ஏப்ரல் 6ந் தேதி வரையில் நடைபெறுகிறது. மேலும் தேர்தல் ஆணையத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை வேட்பாளர்கள் மற்றும் கட்சியினர் கடைபிடித்திட வேண்டும். அதன்படி, வேட்பு மனுவை வேட்பாளரோ அல்லது அவரை முன்மொழிபவர்களோ தாக்கல் செய்யலாம். எந்தக் காரணத்தை முன்னிட்டும் அஞ்சல் வழியாகவோ, வேறு தனிநபர் மூலமாகவோ அனுப்பக் கூடாது. வேட்பு மனுத் தாக்கலுக்கு வேட்பாளர்கள் வரும் போது 100 மீ. சுற்றளவிற்குள் மூன்று வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

வேட்பு மனு தாக்கலின்போது தேர்தல் நடத்தும் அலுவலர் அறையில் வேட்பாளருடன் 4 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். வேட்புமனுத் தாக்கலின் இறுதி நாளான ஏப்ரல் 6ந் தேதி சரியாக பிற்பகல் 3 மணிக்குள் ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய வருகை தந்தால் டோக்கன் முறையில் வேட்பு மனு தாக்கலுக்கு அனுமதி வழங்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஒரு நபர் மட்டும் முன்மொழிந்தால் போதுமானது. மேற்படி வேட்பாளரை முன்மொழியும் நபர்கள் அதே சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். ஒரு வேட்பாளர் 2 சட்ட மன்றத் தொகுதிகளுக்கு மேல் போட்டியிட முடியாது.

வேட்பு மனுத் தாக்கல் செய்யும் வேட்பாளர் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னங்கள் கோரும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட கட்சியின் அங்கீகாரம் பெற்ற நபரிடமிருந்து படிவம் ஏ மற்றும் பி அரசியல் கட்சித் தலைவரின் கையொப்பம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். மேலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பொதுப் பிரிவினர் ரூ10 ஆயிரமும், தாழ்த்தப்பட்ட மற்றம் பழங்குடியின வகுப்பினர் ரூ5 ஆயிரமும் ரொக்கமாக டெபாசிட் தொகை செலுத்த வேண்டும். வேட்பாளர் பிற சட்டமன்றத் தொகுதி வாக்காளராக இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட வாக்குப்பதிவு அலுவலரிடம் பெற்ற சான்று இருக்க வேண்டும்.

இதுபோன்று இந்திய தேர்தல் ஆணையத்தால் வகுக்கப்பட்டுள்ள அனைத்து விதி முறைகளையும் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் முறையாகப் பின்பற்றி வேட்புமனு தாக்கல் செய்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆய்வின் போது, சட்டமன்றத்தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சத்யா (திருவாரூர்), யோகேஸ்வரன் (மன்னார்குடி), ரவி (நன்னிலம்) உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

Related Stories: