பேரவை தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் துவங்கியது நெல்லை மாவட்ட 5 தொகுதிகளில் முதல்நாளில் 15 பேர் மனுதாக்கல்

நெல்லை, மார்ச் 31: சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் துவங்கிய நிலையில் முதலான நேற்று நெல்லை மாவட்டத்தில் இடம்பெற்ற நெல்லை, பாளை, நாங்குநேரி, ராதாபுரம், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 5 சட்டப்பேரவை தொகுதிகளில் 15 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டப்பேரவை மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாக வரும் ஏப் 23ம் தேதி நடக்கிறது. இதையொட்டி வேட்பு மனுத்தாக்கல் நேற்று தொடங்கியது. இம்முறை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 4 நாட்கள் மட்டுமே மனுத்தாக்கல் செய்ய முடியும் நிலை காணப்படுகிறது. நேற்று 30ம் தேதி, வரும் ஏப்ரல் 2 மற்றும் 4, 6ம் தேதிகளில் மட்டுமே வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியும். மற்ற தினங்கள் விடுமுறை தினங்களாக உள்ளன.

எனவே நெல்லை மாவட்டத்தின் 5 தொகுதிகளிலும் வேட்பு மனுத்தாக்கலின் முதல் நாளான நேற்று 15 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். நெல்லை சட்டப்பேரவை தொகுதியில் 3 பேரும், பாளையங்கோட்டை மற்றும் அம்பாசமுத்திரத்தில் தலா 2 பேரும், நாங்குநேரி மற்றும் ராதாபுரம் தொகுதிகளில் தலா 4 பேரும் நேற்று வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். வேட்பு மனு தாக்கலை முன்னிட்டு நெல்லை கலெக்டர் அலுவலகம், நெல்லை மாநகராட்சி அலுவலகம் மற்றும் அம்பை, நாங்குநேரி, ராதாபுரம் தாலுகா அலுவலகங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வேட்புமனு தாக்கல் செய்ய வருவோரின் 3 வாகனங்கள் மட்டுமே கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டது. வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளர் உடன் 5 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். வேட்பு மனுக்களை முதலில் பெற்று பரிசீலனை செய்து, அதன் பின்பு தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: