களக்காடு அருகே கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மழைநீரை வெளியேற்ற தோண்டிய பள்ளத்தை சீரமைக்காததால் மக்கள் அவதி

களக்காடு,மார்ச் 31: களக்காடு அருகே மழைநீரை வெளியேற்ற தோண்டப்பட்ட பள்ளம் சீரமைக்கப்படாததால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம், சேதுராயபுரம் காலனி வடக்கு தெருவில் 100க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்தாண்டு நவம்பர் மாதம் பெய்த வடகிழக்கு பருவமழையினால் தெருவில் மழை நீர் குளம் போல் தேங்கி, வீடுகளை சூழ்ந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதிபட்டனர். வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் வீடுகளிலேயே முடங்கினர். தெருவில் சாலை அமைக்கப்படவில்லை. அதுபோல வாறுகால்களும் இல்லை. எனவே தான் மழைநீர் வெளியேற வழியின்றி தெருவிலேயே குளம் போல் தேங்கியதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதனைதொடர்ந்து சீவலபேரி பஞ்சாயத்து நிர்வாகத்தில் தெருவில் பள்ளம் தோண்டி மழை நீரை வெளியேற்றினர். ஆனால் தோண்டப்பட்ட பள்ளம் கடந்த 5 மாதங்களாக சீரமைக்கப்படவில்லை. வீடுகளுக்கு முன்பாக அகழி போல் பள்ளம் தோண்டப்பட்டுள்ளதால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். பள்ளத்தில் சிக்கி பலர் கீழே விழுந்து காயமடைவதாகவும் கூறப்படுகிறது. மாணவ,மாணவிகளும் பள்ளத்தை கடந்து செல்ல முடியாமல் தினறி வருகின்றனர். எனவே பள்ளத்தை சீரமைக்க மாவட்ட நிர்வாகத்தினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மகேந்திரன் கூறுகையில், ‘பள்ளம் தோண்டப்பட்ட போதே அதனை சீர் செய்ய கூறினோம். ஆனால் அப்படியே போட்டு விட்டு சென்று விட்டனர். பள்ளம் நிரப்பப்படாததால் டூவீலர்கள் தெருவிற்குள் நுழைய முடியவில்லை. வாகனங்களும் செல்ல முடியாததால் மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வீடுகளை விட்டு வெளியேறுவது பெரும் சவாலாக உள்ளது. உடனடியாக பள்ளத்தை நிரப்பவும், வாறுகால் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: