டிராவல்ஸ் உரிமையாளரிடம் பணமோசடி செய்த தம்பதி கைது – பரபரப்பு தகவல் ரூ.10 லட்சம் பணம், நகைகள் பறிமுதல்

புதுச்ேசரி, மார்ச் 31: டிராவல்ஸ் உரிமையாளரிடம் பணமோசடி செய்த தம்பதியை புதுச்சேரி போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி சர்கோப் வீதியில் வசித்து வருபவர் நாராயணன். சொந்தமாக டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் தனது வீட்டை மணிகண்டன்-கங்காதேவி தம்பதிக்கு வாடகைக்கு விட்டுள்ளார். இவர்கள் இருவரும், சங்கீதா, அப்துல் காதர், முகமது சித்திக் ஆகியோருடன் சேர்ந்து நாராயணனிடம் நன்றாக பழகி, ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பி நாராயணனும் சுமார் ரூ.4.53 கோடி முதலீடு செய்தார். ஆனால் மணிகண்டன் தரப்பினர் எந்த தொழிலும் செய்யாமலும், பணத்தை திரும்ப தராமலும் ஏமாற்றியுள்ளனர்.

இதையடுத்து நாராயணன் கடந்த ஜனவரி மாதம் புதுச்சேரி சிபிசிஐடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் மணிகண்டன் என்ற மணி, கங்காதேவி, சங்கீதா, அப்துல் காதர், முகமது சித்திக் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து சீனியர் எஸ்.பி. நித்திய ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தலின்படி எஸ்.பி., தனசேகரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சிறப்புநிலை சப்-இன்ஸ்பெக்டர் சிவசித்தன், உதவிநிலை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனிராஜா மற்றும் போலீசார் அடங்கிய சிறப்பு படை அமைக்கப்பட்டது.

இதில், சங்கீதா மற்றும் முகமது சித்திக் ஆகியோர் சிபிசிஐடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, திருநெல்வேலி மேலப்பாளையம் பகுதியில் பதுங்கியிருந்த மணிகண்டன், கங்காதேவி ஆகியோரை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர். அப்போது, மணிகண்டனின் உண்மையான பெயர் சையது முகமது புகாரி என்பதும், அவர் மணிகண்டன் என்ற பெயரில் ஆள்மாறாட்டம் செய்து போலியான ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் போலி ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, பல செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து, காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சையது முகமது, கங்காதேவி தம்பதியை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தபோது, நாராயணனிடம் பெற்ற பணத்தை பல இடங்களில் முதலீடு செய்திருப்பதாக தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களிடம் இருந்து ரூ.10 லட்சம் பணம் மற்றும் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மீதி பணத்தை பறிமுதல் செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். சிறையில் அடைக்கப்பட்ட சையது முகமது மீது சேலம், தருமபுரி சிபிசிஐடி காவல் நிலையத்திலும் மோசடி வழக்கு உள்ளது. இதுதவிர திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட இடங்களில் மோசடி சம்பவங்களில் ஈடுபட்டு இருப்பதாகவும், புதுவையில் மேலும் 2 பேரிடம் மோசடி செய்து இருப்பதாகவும்தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து, பாதிக்கப்பட்ட நபர்கள் யார் என்று விசாரித்து புகார் பெறும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: