நேபாளத்தின் 47வது பிரதமராக பாலேந்திர ஷா பதவியேற்பு

காத்மண்டு: நேபாளத்தில் ஆட்சி அகற்றப்பட்டு சுமார் 6 மாதங்களுக்கு பின் புதிய பிரதமராக பாலேந்திர ஷா நேற்று பதவியேற்றார். நேபாளத்தில் பிரதமர் சர்மா ஒலி தலைமையிலான கூட்டணி அரசு நடந்து வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஊழல், வாரிசு அரசியல் மற்றும் சமூக ஊடகத் தடை ஆகியவற்றுக்கு எதிராக இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட ஜென் இசட் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதமர் சர்மா ஒலி தலைமையிலான அரசு அகற்றப்பட்டது.

பின்னர் ஜென் இசட் குழுவின் பரிந்துரையின்பேரில் முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்க்கி இடைக்கால பிரதமராகப் பொறுப்பேற்றார். இந்நிலையில் புதிய அரசை தேர்ந்தெடுக்கும் வகையில் இந்த மாதம் 5ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ராப் பாடகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய பாலேந்திர ஷாவின் ராஷ்ட்டிரிய ஸ்வதந்தரா கட்சியானது மொத்தம் உள்ள 275தொகுதிகளில் 182 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மை அரசை அமைப்பதற்கான தகுதியை பெற்றது.

நான்கு முறை பிரதமராக இருந்த சர்மா ஒலியை பாலேந்திர ஷா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றிப்பெற்றார். இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்ற ராஷ்ட்டிரிய ஸ்வதந்தரா கட்சியானது ஆட்சி அமைத்துள்ளது. கட்சியின் தலைவரான பாலேந்திர ஷா நேபாளத்தின் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக நேற்று பொறுப்பேற்றார்.

சீதல் நிவாசில் அமைந்துள்ள குடியரசு தலைவர் அலுவலகத்தில் நடந்த விழாவில் பாலேந்திர ஷா பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். அரசியலமைப்பின் 76(1)வது பிரிவின்படி குடியரசு தலைவர் ராம் சந்திர பவுடல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். நேபாளத்தின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள பாலேந்திர ஷாவிற்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Related Stories: